பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32. காமராசர் முதலமைச்சரானார்

சில திங்களுக்குப் பின், சென்னை மாநில சட்டமன்றம் கூடிற்று. அப்போது உறுப்பினர் ஒருவர் கேள்வியொன்று கேட்டிருந்தார். அது குலக் கல்வித் திட்டம் பற்றியது.

புதிய கல்வித் திட்டத்தால், பள்ளிக்கு வருவோர் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறதா? மாவட்ட வாரியாகப் புள்ளி விவரங்களைக் கேட்டிருந்தார்.

புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டன; சட்டமன்றத்தில் வெளியிடப்பட்டன. அவை புலப்படுத்தியது என்ன?

‘இரண்டொரு மாவட்டங்கள் நீங்கலாக, பெரும்பாலான மாவட்டங்களில், எதிர்பார்த்ததற்கு மாறாக பள்ளிக்கு வருவோர் வருகை, பெரிதும் குறைந்து விட்டது’—இப்படி முதலமைச்சர் இராசகோபாலாச்சாரியார் பதில் அளித்தார்.

நோயாளிக்குக் கொடுத்த மருந்து, நோயை அதிகமாக்கி விட்டதை உணர்ந்த மருத்துவர், அம்மருந்தைக் கை விட வேண்டியதுதானே?

கூடுதலாகப் பிள்ளைகளைச் சேர்க்க உதவும் என்ற சாக்கில், அரை வேளைப் படிப்பைக் கொண்டு வந்தவர், அதற்கு நேர் மாறான விளைவைக் கண்ட பிறகு, அதைக் கை விட்டு விட வேண்டியதுதானே! அதைத்தான் அவருடைய கட்சியார் எதிர்பார்த்தார்கள்.

நடந்ததோ வேறு வகையாக இருந்தது. அத்திட்டத்தை நியாயப்படுத்தும் சிறு குழுவொன்றை நியமித்தார்; ஆதரவாக அறிக்கை பெற்றார். அரசின் திட்டங்களை மெய்யாக விமர்சிக்கும் உரிமை, வெள்ளையனோடு வெளியேறி விட்டதே! குலக் கல்வித் திட்டம் தொடரும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன.

தன் ஆட்சிக்குத் தொல்லை கொடுக்கவே, பெரியாரும், திராவிடர் கழகமும் அப்பாட முறையை எதிர்ப்பதாக, ஊர், ஊராகப் பொய்யைப் பரப்ப ஆட்களை முடுக்கி விட்டார்.

—12—