பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

பெரியாரும்‌ சமதர்மமும்‌

காமராசர், போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும், அவரை முன் மொழிந்த மீ. பக்தவத்சலத்தையும், தனது அமைச்சர் அவையில் சேரும்படி அழைத்தார். அவர்களும் உடன்பட்டு உதவினார்கள்.

காமராசர் முதலமைச்சரானது, ஓரளவு எளிதாகவே இருந்தது. ‘அவரால் தொடர்ந்து நீடிப்பது இயலாது; ஓராண்டின் முடிவிலாவது, புதிய ஒருவரிடம் கொடுத்து விட்டுப் போய் விடுவார்’ என்று காமராசரை வட்டமிட்டுக் கொண்டிருந்தவர்களே எண்ணினார்கள், இராஜாஜியைச் சேர்ந்தவர்களோ, காமராசரை வீட்டிற்கு அனுப்பி, பழி தீர்த்துக் கொள்ள, ஓயாது முயன்றார்கள்.

காமராசரின் விவேகம், எல்லோருடனும் அன்பாகப் பழகும் எளிமை, நேர்மை தன்னலமின்மை, சாதி நலம் பாராது மக்கள் நலனுக்கானவற்றைத் துணிந்து செயல்படுத்தியவை, ஆகிய சிறப்புகள், காமராசர் பல்லாண்டுகள் ஆட்சி புரிய உதவிற்று. இவை அத்தனையும் உதவியதைக் காட்டிலும், அதிகமாகப் பெரியாரின் ஆதரவு உதவியது என்பது மிகையல்ல.

முதல் அமைச்சர் காமராசரின் சாதனைகளைக் காங்கிரசார் எடுத்துச் சொன்னதை விட, செம்மையாகப் பெரியாரும், அவரைச் சார்ந்தவர்களும் மக்களிடம் பரப்பி வந்தார்கள்.

முன்னர் முடியாதது எல்லாம், காமராசர் காலத்தில் முடிந்தது.

நாள்தோறும் எண்ணற்ற ஏழைகள், முதல் அமைச்சரைக் காண முடிந்தது; குறைகளைச் சொல்ல முடிந்தது. ‘பார்க்கலாம்’ என்பதற்கு மேல் பிடி கொடுக்காமல் அனுப்பினாலும், போக்க வேண்டிய குறைகள் விரைவில் போக்கப்பட்டன. கட்சிக்காரர்களும், சட்டத்திற்குக் கட்டுப்பட வேண்டியிருந்தது. கட்சிக்காரர் என்பதனால், எதையும் சாதித்துக் கொள்ளலாம் என்னும் நிலை ஏற்படவில்லை. கட்சிக்காரர்களுக்கும், மற்றவர்களுக்கும் ஒரே தராசு. இப்படி நிர்வாகம் சீர்பட்டது.

நல்ல நிர்வாகமே போதுமென்றால், வெள்ளைக்காரனை விரட்டியிருக்க வேண்டாமே! தன்னாட்சி, எல்லோர்க்கும் வாழ்வளிக்க அல்லவா பயன்பட வேண்டும்?

எல்லோரும் புது வாழ்வும், நல்வாழ்வும் பெற ஒரே ஒரு வழிதான் உண்டு. அதுவே கல்வி வளர்ச்சி. அதில் காமராசர் புரிந்த சாதனை இணையற்றது.