காமராசர் முதல் அமைச்சரானார்
181
காமராசர், முதல் அமைச்சர் ஆனதும், குலக் கல்வித் திட்டத்தை ஒழித்து விட்டார். பழையபடி, முழு நேரப் படிப்பிற்கு ஆணையிட்டார்; இல்லை ஆணையிட வைத்தார். கல்வி அமைச்சர் சி. சுப்ரமணியத்தைக் கொண்டு ஆணையிடச் செய்தார். அடுத்து? வளர்ச்சி.
வெள்ளைக்காரர்கள் வெளியேறிய போது, தமிழகப் பகுதியில், 14,000 தொடக்கப் பள்ளிகளை விட்டுச் சென்றார்கள். ஆயிரம் மக்கள் கொண்ட ஊர்களில் கூட தொடக்கப் பள்ளி, தொடங்காமல் போய்ச் சேர்ந்தார்கள்.
அவர்களிடமிருந்து ஆட்சியைப் பெற்றவர்கள் சாதித்தது என்ன? ஏழு ஆண்டுகளில் எண்ணிக்கையைப் பதினாறு ஆயிரம் ஆக்கினார்கள். அதாவது, ஆண்டுக்கு சராசரி முன்னூறு புதிய தொடக்கப் பள்ளிகள் அவ்வளவே. காமராசர் திட்டம் என்ன? அய்ந்து வயதுக் குழந்தை போய் வர வசதியாக, எத்தனை பள்ளிகள் தேவைப் பட்டாலும், திறக்கச் செய்தார்கள். அவருடைய பொற்காலத்தில், தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை முப்பதாயிரத்தைத் தாண்டிற்று. அதற்கு மேல், பள்ளிக்குத் தேவை ஏற்படவில்லை.