33. கல்விப் புரட்சியில்
காமராசரும் பெரியாரும்
‘எல்லோர்க்கும் கல்வி’ என்ற கொள்கையின் அடிப்படையில், கல்வி வளர்ப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முந்நூறு மக்கள் கொண்ட சிற்றூர் தோறும் தொடக்கப் பள்ளி திறந்தது அம்முயற்சிகளில் ஒன்று.
தொடக்கப் பள்ளி தோறும், ஏழை மாணாக்கர்களுக்கு—தெரு சுற்றும் ஏழைகளுக்கல்ல—பகல் உணவு போட்டது, மற்றோர் முயற்சி. அதைப் பற்றிச் சிறிது விவரமாகவே தெரிந்து கொள்ளுங்கள்.
கர்ம வீரர் காமராசர் முதல் அமைச்சர் ஆன ஆறு தினங்களில், சென்னை மாநிலப் பொதுக் கல்வி இயக்குநர் பதவி, திடீரென காலியாக நேர்ந்தது. ‘காலியாகப் போகிறது. அதை தகுதியடிப்படையில் நிரப்ப வேண்டும்’ என்று அப்போதைய தலைமைச் செயலர் திரு. ராமுன்னி மேனன், அவரிடம் தெரிவித்த உடனே, முடிவு செய்து விட்டார். என்ன முடிவு?
அதிகாரிகளில், எவருடைய இரகசியப் பேரெடுகள் சிறப்பாக இருக்கிறதோ, அவருடைய பெயரைப் பரிந்துரையுங்கள் என்பதே அம்முடிவு. பேரேடுகளை ஆய்ந்த போது, என் பேரேடுகள், மற்றவரின் பேரேடுகளை விட நன்றாக இருந்ததாம். எனவே, எதிர் பாராத வகையில், திடீரென நான் சென்னை மாகாணப் பொதுக் கல்வி இயக்குநர் ஆனேன்.
சில திங்களில், நான், அன்று நம்மோடு இருந்த மலையாளம் மாவட்டத்திற்குச் செல்ல வேண்டியதாயிற்று. அங்கு, பெரிந்தல்—மண்ணா என்று ஒரூர்; அங்கு ஓர் உயர் நிலைப் பள்ளி. அப்பள்ளி மாணாக்கரிடம் அழைக்கப்பட்டேன். அங்கே சென்றேன். கூட்டம் தொடங்கிய அய்ந்து மணித் துளிகளில், இரு மாணவர்கள், ஒருவர் பின் ஒருவராக, மயங்கி வீழ்ந்தார்கள். எதனால்? பட்டினி தாளாமல். பிற்பகலில் இப்படி அறுபது, எழுபது பேர்கள் மயங்கித்