பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்விப் புரட்சியில் காமராசரும் பெரியாரும்

185

வீணாகுமே ஒழிய, பலன் இராது; அதைக் கை விட்டு விடுங்கள் என்றார்கள். முதல் அமைச்சர் பொறுமையிழக்கவில்லை. பகல் உணவுத் திட்டம் அய்ந்தாண்டுத் திட்டத்தில் சேரட்டும் என்று ஆணையிட்டார். முடிந்ததா எதிர்ப்பு? இல்லை.

இந்தியத் திட்டக் குழுவின் ஆலோசனைக்குப் போன போதும், நம் மூத்த அலுவலர்கள் அதை விட்டு விடச் சொன்னார்கள்; காமராசர் இசையவில்லை. முதல் அமைச்சர் உறுதியாக இருந்ததால், அதை நீக்க முடியவில்லை. அய்ந்தாண்டுத் திட்டத்தில், இடம் பெற்றது. அந்த அடிப்படையில், அடுத்த ஆண்டிற்கான மாநில வரவு செலவுத் திட்டம் தீட்டப்பட்டது. சென்னைச் சட்ட மன்றம் பகல் உணவுக்கான நிதி ஒதுக்கீட்டை, ஒப்புக் கொண்டது.

‘சாமி வரங் கொடுத்தாலும், பூசாரி வரங் கொடுக்கவில்லை’ என்பார்களே! அதைப் போல், சட்டமன்றம் ஒப்புக் கொண்ட பகல் உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆணையைக் கோட்டை அதிகாரிகள் வெளியிடவில்லை.

இதற்கிடையில், தூத்துக்குடி நகர ஆசிரியர் மன்ற ஆண்டு விழாவில் நான் பேசினேன்.

‘நாட்டுப்புறக் குடியானவர்கள், ஒப்படையானதும், முதல் அளவையை ‘சாமி’க்கும் இரண்டாம் அளவையை ஊர்க்காவலர்களுக்கும் அளந்து வைப்பது மரபு. இனி, மூன்றாவது அளவையை பள்ளிக்கூட அன்ன தானத்திற்கு என்று ஒதுக்கி வைக்கும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள்’ என்று ஆலோசனை கூறினேன்.

இச்செய்தியைப் படித்தவர்கள் பலர். நடைமுறைப் படுத்த முதலில் முன் வந்தவர்கள் திருநெல்வேலி மாவட்ட நாகலாபுரத்துப் பெரியோர்கள்.

அவர்கள் களத்து மேட்டு நன்கொடைகளைக் கொண்டு, பகல் உணவுத் திட்டத்தை நடத்த முடிவு எடுத்தார்கள். அச்செய்தி பெரிய எழுத்தில் வெளியிடப்பட்டது. அதைப் பார்த்த அக்கம் பக்கத்து ஊர்க்காரர்கள், அதே வகையில், பகல் உணவைத் தொடங்க முடிவு செய்தார்கள்.

முழுக்க, முழுக்க மக்கள் விருப்பப்படி, அவர்கள் நன்கொடைகளைக் கொண்டே, பள்ளிக்கூட பகல் உணவுத் திட்டம் 1956ஆம் ஆண்டு ஜூலை திங்கள் தொடங்கிற்று. அது பல மாவட்டங்களுக்கும் பரவிற்று.