192
பெரியாரும் சமதர்மமும்
தூக்க மாத்திரை; நோய் போக்கும் மருந்தல்ல, என்பதை உணர்ந்தார். சோவியத் நாட்டிற்குச் செல்வதற்கு முன்பே, சமதர்மக் கொள்கையும், பொது உடைமைக் கோட்பாடுமே, தன்மான இயக்கத்தின் குறிக்கோள் என்று மாநில மாநாட்டின் முதல் முடிவாக, முரசு கொட்டச் செய்தார். பெரியார் சமதர்மத்திற்குப் பாடுபட்ட அளவு, வேறு எதற்கும் பாடுபடவில்லை என்பது உண்மை.
சுயமரியாதைச் சமதர்மத் திட்டத்தை அறிவித்து, அதைப் பரப்புவதில் முனைப்பைக் காட்டி, வெற்றி பெறத் தொடங்கினார். அதன் வீச்சைக் கண்டு அஞ்சிய ஆங்கிலேய ஆட்சி, தந்தை பெரியாரைத் தண்டித்துச் சிறைக்கு அனுப்பியது.
சில ஆண்டுகளுக்குப் பின், பெரியார் சமதர்மப் பணியைப் பின்னுக்குத் தள்ளி, சாதியொழிப்புப் பணியில் ஈடுபட நேர்ந்தாலும், நீதிக் கட்சி சுயமரியாதை - சமதர்மத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளும் நிலையை உருவாக்கி விட்டார். ‘ஏழைகளைப் பற்றியே சிந்திக்கிற ஒரே செல்வருமான பெரியார் காலத்திலேயே சமதர்மத்தைக் காண’த் துடித்தார்கள். சிந்தனையாளர்கள்.
வடஇந்திய சமதர்ம சக்திகளும், தென்னிந்திய சமதர்மவாதிகளும் ஒன்றிணைந்து விட்டால், சாதி முறையும், தனியுடைமை முறையும் இடிந்து வீழ்வது உறுதியென அஞ்சிய, இராசகோபாலாச்சாரியார் 1938-இல் கட்டாய இந்தியைத் திணித்தார். பிறர் முன் வந்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடாததால், பெரியாரும், அவரது இயக்கமும் ஈடுபட நேர்ந்தது. மீண்டும் 1948இல் இந்தித் திணிப்பு வந்தது. அப்போதும், பெரியார் இயக்கமே போராட வேண்டியதாயிற்று. இப்படியிரு முறை சமதர்மப் பயணம் தடைப்பட்டது. 1949இல் ஏற்பட்ட கட்சிப் பிரிவினை, பயணத்தைப் பாழாக்கிற்று.
பெரியார் திராவிட நாடு பிரிவினைக்குப் போராடியது ஏன்? பெரிய இந்தியாவில், சமதர்மத்தைக் கொண்டு வருவதை விட, விரைவாகவும், எளிதாகவும் திராவிட நாட்டில் கொண்டு வர முடியும் என்று நம்பியதால். இந்தியா முழுவதும், சமதர்ம முறையின் கீழ் வரக் கூடுமானால், திராவிட நாடு தேவை இல்லை என்றே பெரியார் அறிவித்தார்.