4. முதல் சுயமரியாதை மாநாடு
முதல் சுயமரியாதை மாநாட்டில், குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த சமையல்காரர்கள் (விருது நகர நாடார்) உணவு சமைப்பார்கள். பல சாதியார் பரிமாறுவார்கள். அதை மாநாட்டு பிரதிநிதிகள், பல சாதியரோடும் அமர்ந்து உண்ண உடன்பட வேண்டும் என்று முன் கூட்டியே அறிவிக்கப்பட்டது. அக்காலத்தில் அது பெரும் புரட்சி.
உயர்வாகக் கருதப்பட்ட சமுதாயத்தினர் (அய்யர்கள்) சமைப்பதை உண்ணவும், சமபந்திக்கு உடன்படுவோர் அன்று அருமை. சமுதாயத்தின் அநீதிகளுக்கு ஆளான (நாடார்) சமூகத்தினர் சமைப்பதை உண்பது என்பது, அன்று அநேகருக்கு அதிர்ச்சி தரும். வேறு எந்த மக்கள் இயக்கமும் செய்யத் துணியாத, இந்த அதிர்ச்சி மருத்துவத்தைப் பெரியாரின் தன்மான இயக்கம் தொடக்கத்திலேயே வெற்றிகரமாகச் செய்து காட்டியது. ஆறாயிரம் தமிழர்கள் ஒன்றாக உட்கார்ந்து, உண்ட புரட்சி பெரிது. ஆம்; வரலாற்றுச் சிறப்புடையது ஆகும்.
முதல் சுயமரியாதை மாநாடு—சாதியொழிப்பு, வழிப்பாட்டில் தரகர் ஒழிப்பு, ஆண் பெண் சமத்துவம் பற்றி முற்போக்கான முடிவுகள் எடுத்தது. அவற்றைப் பார்ப்போம்.
‘மக்கள் பிறவியினால் உயர்வு, தாழ்வு உண்டென்ற கொள்கையை இம்மாநாடு அடியோடு மறுப்பதுடன், அதை ஆதரிக்கும் மதம், வேதம், சாத்திரம், புராணங்களையெல்லாம் பொது மக்கள் பின்பற்றக் கூடாதென்றும்,
‘வருணாசிரமமென்ற கொடுமையான கட்டுப்பாட்டையும், சமுதாய முறையில் காணப்படும் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் முதலிய ஆட்சேபகரமான பிரிவுகளையும் ஏற்றுக் கொள்ளக் கூடாதென்றும்,
‘மனித நாகரீகத்திற்கும், தேச முன்னேற்றத்திற்கும் தடையான தீண்டாமை என்பதை ஒழித்து, எல்லாப் பொதுத் தெருக்கள், குளங்கள், கிணறுகள், பாடசாலைகள், சத்திரங்கள், தண்ணீர்ப்