பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியச் சூழலில் பாட்டாளிகள் யார்?

21

நெருக்கடியை—உருவாக்கியது கம்பெனி நிர்வாகம். அவ்வேலை நிறுத்தங்களின் போது, தொழிற் சங்கத் தலைவர்களான தோழர்கள் முகுந்தலால் சர்க்கார், மா.சிங்காரவேலு மட்டுமின்றி, தொழிலாளர்களுக்கு ஆதரவு தந்த ஈ.வெ.ராமசாமியும் சிறைப்பட்டார் என்பது வரலாற்றுச் செய்தியாகும்.

முதல் மாகாண சுயமரியாதை மாநாடு நடக்கும் போது, இந்தியாவை ஆண்டவர்கள் ஆங்கிலேயர். தென்னிந்திய இரயில்வே ஆங்கிலேயருடையது. ‘ஆங்கில ஆட்சிக்கு ஆதரவானவர்கள்’ என்று பொய்யாகக் குற்றஞ் சாட்டப்பட்ட சுயமரியாதைக்காரர்களின் முடிவை ஆழ்ந்து கவனியுங்கள். இதோ அம்முடிவு:

‘தென்னிந்திய இரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தத்தில், அரசாங்கத்தார் நடு நிலைமை வகிக்காததற்காக, அவர்களைக் கண்டிப்பதுடன், அநியாயமாய்த் துன்பப்பட்ட தொழிலாளர்களிடம், இம்மாநாடு அனுதாபம் காட்டுகிறது.’

செங்கற்பட்டின் சுயமரியாதை மாநாட்டின் முடிவுகள், தமிழகமெங்கும் எதிரொலித்தன. சாதிப் பெயர்களைப் பற்பலர் விட்டு விட்டனர். கோயிலுக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டோர் பலர்.

‘கும்பிட்ட கைக்கொரு செம்புக் காசேனும் தராத தெய்வத்தை நம்பாதே’ என்று அறிவுறுத்தும் பாட்டுக் கூட, மேடைகளில் முழங்கியது. பெரும்பான்மையோரான நம்பிக்கையாளர் மனம் புண்படும் என்று காரணம் காட்டி, கடவுள் மறுப்புப் பாடலைத் தடை செய்ய எவரும் முன் வரவில்லை. அந்தக் கால கட்டத்தில், வசந்த கால மரமாகத் தழைத்தது, சுயமரியாதை இயக்கம்.

அதன் இரண்டாவது மாகாண மாநாடு, 1930 மே திங்களில் ஈரோட்டில் பெரியாரின் நேரடி ஏற்பாட்டில் கூடியது; பம்பாயைச் சேர்ந்த பிரபல அறிஞரும், முற்போக்குக் கருத்துக்களைக் கொண்டவருமான எம்.ஆர்.ஜெயகர் அவர்கள் தலைமையில் கூடிற்று.

இரண்டாவது மாநாட்டிலும், வருணாசிரம மறுப்பு, சாதி ஏற்றத் தாழ்வுக்கு உடன்படாமை, சாதிப் பட்டங்களை விடுதல், தீண்டாமையொழிப்பு முதலானவை பற்றி, ஏற்கனவே மேற்கொண்ட முடிவுகள் மீண்டும் வலியுறுத்தப்பட்டன.

‘வருணாசிரமக் கொள்கையும், சாதிப் பிரிவினையுமே இந்திய சமூகக் கேடுகளுக்கு மூல காரணமென்று இம்மாநாடு கருதுகிறது.’