கோயில் சொத்துக்களும் ஊதிய உச்சவரம்பும்
25
படுத்துவது சுயமரியாதைக்கு விரோதமென்றும், தெய்வ வணக்கத்திற்குப் பணச் செலவு அனாவசியமென்றும் அம்மாநாடு கருதிற்று. கடவுள் நம்பிக்கையுடையவர்களும், காய்தல், உவத்தல் அற்ற அறிவு நிலையில் நின்று சிந்திப்பார்களானால், தந்தைக்கும், பிள்ளைகளுக்குமிடையில் கூலிக்காரனுக்கு வேலையில்லை என்னும் முடிவுக்கே வருவார்கள்.
நம் இந்தியாவில், தனியுடைமை முறையின் கீழ், தனிப்பட்ட மனிதர்களின் ஒட்டு மொத்த உறிஞ்சலை விட அதிகப்படியானது நம்முடைய கோயில்கள், மடங்கள், சத்திரங்கள் ஆகியவற்றின் கூட்டு உறிஞ்சல் ஆகும். இவற்றால் பாழாகும் பணம் கணக்கில் அடங்கா. இவற்றைக் காப்போராகக் கருதப்படுவோர், விழுங்கும் பணம் கொஞ்சமல்ல. இது உலகறிந்த உண்மை. ஆனாலும், கோயிற் பூனைகளுக்கு, அறங்காவலர்களாகத் திரியும் பல காட்டுப் பூனைகளுக்கு மணி கட்டுவது யார்? தன்மான இயக்கம் இன்றியமையாத அப்பணியை மேற்கொண்டது ஈரோட்டு மாநாட்டிலேயே.
கோயில்கள், மடங்கள் ஆகியவைகளின் வருமானங்களை—படிப்பு, சுகாதாரம் ஆகிய அபிவிருத்திக்காகச் செலவிடுவதுதான் மேலென்றும், புதிதாக மடங்களும், வேத பாடசாலைகளும், அன்ன சத்திரங்களும் கட்டுவது அனாவசியமென்றும் முடிவு செய்யப்பட்டது. இம்முடிவின் முற்பகுதி ஓரளவு செயல்படுவது பகுத்தறிவாளர்களின் தொடர்ந்த தொண்டால். பிந்திய பகுதி செயலுக்கு வரவேயில்லை என்றால் மிகையல்ல. இது, முடிவில் உள்ள குறைபாட்டால் அல்ல; தமிழர்களுக்கே தனியுடைமையாக உள்ள முனைப்பான விதண்டாவாதத்தால்; ஏட்டிக்குப் போட்டிப் போக்கால் என்பவை வெளிப்படை.
ஈரோட்டு மாநாட்டின் போதே, அதாவது 1930லேயே, தன்மான இயக்கத்தில் சமதர்மக் கோட்பாடு இழையோடிற்று. இதோ ஓர் எடுத்துக்காட்டு. சுயமரியாதை இளைஞர் மாநாட்டின் முடிவுகளில் ஒன்று என்ன சொல்லுகிறது தெரியுமா?
அரசாங்கத்திலுள்ள எந்த உத்தியோகக்திற்கும், மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் ஏற்படுத்தாதிருக்கும்படி, அரசாங்கத்திற்கும், அரசியலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்ளுகிறது.