26
பெரியாரும் சமதர்மமும்
எதை எதையோ சொல்லி, ஆட்சியைப் பிடித்தவர்கள், ஊதிய உச்சவரம்புக் கொள்கையையாவது, விடுதலை பெற்ற இந்தியாவில் நடைமுறைப்படுத்தியிருந்தால், நம் மக்களில் வறியவர்கள் எண்ணிக்கையும், விழுக்காடும் இப்போது பெருகியிருப்பது போல், பெருகியிராது. அகவிலை நஞ்சும், இன்றைய அளவிற்கு ஏறியிராது.
எங்கோ பத்தாயிரம் கிலோ மீட்டர் தூரத்திலிருந்து வந்தவர்கள் ஆங்கிலேய அதிகாரிகள். அவர்கள் இவ்வளவு தூரம் கடந்து வந்து, வெய்யிலைத் தாங்கிக் கொண்டு, பதவி வகித்து, கூடிய மட்டில் சுரண்டிக் கொண்டு போகவே, அந்நோக்கத்திற்கேற்ப ஊதியங்களை உயர்வாக வைத்துக் கொண்டார்கள். இதை மன்னிக்கா விட்டாலும், புரிந்து கொள்ளலாம்.
தன்னாட்சி பெற்றதும், சொந்த நாட்டு அலுவலர்களுக்கு மக்கள் வருவாய் நிலைக்கு ஏற்ப, ஊதியங்களைக் குறைத்திருக்க வேண்டும். பத்தாயிரம் கிலோ மீட்டர் தூரம், அப்போதைக்கப்போது போய் வர வேண்டியவர்களுக்கு ஆகும் செலவு பெரிது. சென்னையிலிருந்து இருநூறு கிலோ மீட்டர் தூரத்திற்கும் குறைவாக உள்ள வளவனூருக்குப் போய் வர ஆகக் கூடிய செலவு, முந்தியதோடு ஒப்பிட்டால் குண்டுமணி அளவு. தன்மான இயக்கம் முதன் முதல் கூட்டிய—அனைத்திந்திய காங்கிரசு மாநாட்டில் பின்னர் முடிவு செய்த, ஊதிய உச்சவரம்புக் கொள்கையைக் கூட நம்முடைய தன்னாட்சி அரசுகள் நடைமுறைப் படுத்தவில்லை. விளைவு? வெள்ளைக்காரன் பீராய்ந்த அளவு, நம்மவர்களும் பீராய்ந்து கொண்டு வருகிறார்கள். இல்லை; மெல்ல, மெல்ல இந்தச் சலுகை, அந்த வசதி என்று மொத்த ஊதியப் பெருக்கத்தில் வெற்றி பெற்றபடியே இருக்கிறார்கள். இப்போது, நம்முடைய அதிகார வர்க்கம், சுரண்டுவதில் முதலாளி வர்க்கத்தோடு போட்டி போடுகிறது என்னும் கசப்பான உண்மையைச் சுட்டிக் காட்டுவது கடமை.
ஏன் ஊதிய உச்ச வரம்பு கொண்டு வரவில்லை? குழப்பம். என்ன குழப்பம்? சமதர்மப் பொருளியல் முறையே ,எல்லார்க்கும் வேலையும், கல்வியும், வாழ்வும் அளிக்கும் என்னும் உண்மை ஒரு பக்கம் மின்னிற்று. அதே நேரத்தில், ஆயிரம் ஆண்டுகளாக மங்கிய ஒளியில் கிடந்த செல்வர்கள், அறங்காவலர்கள் ஆகியோரது குருதியில் ‘ஈவது விலக்கேல்’ என்பது கலந்தது. அவர்களாகவே வலிய வந்து, ‘வறியரை வாழ்விப்பார்கள்’ என்னும் மாயைக்கு இருந்த