பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோயில் சொத்துக்களும் ஊதிய உச்சவரம்பும்

27

அளவிற்கு மீறிய மரியாதை, அதன் புது ஒளியிலேயே வளர்ந்து விட்ட ‘மகான்கள்’, ‘சான்றோர்கள்’ ஆகியவர்களைப் பகைத்துக் கொண்டால், தங்கள் நிலை கவிழ்ந்து விடுமோவென்ற அச்சம். இந்த இரண்டு ஆடுகளில் ஊட்டிய குட்டிகளாக, நம் அரசியல் தலைவர்கள் இருந்து விட்டார்கள்.

ஆகவே, காற்றடித்த பக்கம் பறந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் காலம் நன்றாக ஓடிற்று. ஆனால், பொதுமக்கள் நிலையோ, பாம்புகள் நிறைந்த பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டவர்கள் நிலைக்கு ஒப்பாக இருக்கிறது.

இன்று ஏறத்தாழ, இரண்டு கோடி படித்த இளைஞர்கள், வேலை தேடும் நிலையங்களில் பெயர்களைப் பதிந்து விட்டு, வழி மேல் விழி வைத்து ஏங்குகிறார்கள். பூசாரி ‘சொர்க்கத்திற்கு’ அனுப்புவதாகக் கூறுவது போல், பொதுத் தேர்தலின் போது, இந்திய அரசியல் புரோகிதர்கள் வேலையில்லாத் திண்டாட்டதைத் தீர்த்து விடுவதாக உளமாரப் பொய் சொல்லுகிறார்கள். நாம் பின்பற்றும் தனியுடைமைப் பொருளியல் முறையில், வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கி விட்ட நாடே இல்லை என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்; தெரிந்தும், எதையோ சொல்லி வைக்கிறார்கள். எவரும், இதற்குப் பரிகாரம் காணவில்லை. ஏன்? இன்றையப் பொருளியல் முறை, தலைகீழாக மாற்றப்பட்டாலொழிய, வேலை வாய்ப்புகள் போதிய அளவு பெருகா.

இதை அறுபது ஆண்டுகளுக்கு முன்பே, தந்தை பெரியார் உணர்ந்தார்; ஊரறிய, உலகறிய உரைத்தார். நாம் கூடி நின்று ஆதரித்தோம். போராட வேண்டிய அளவுக்குப் போராடினோமா? கேள்விக் குறி.