பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமதர்மத்தை நோக்கியே சுயமரியாதை இயக்கம்

29

னார். தன்மான இயக்கத்தைக் கண்டார். மக்கள் சமத்துவத்திற்குப் போராடினார். மக்களிடையே, ஏற்றத் தாழ்வு உணர்ச்சியினைப் பயிரிட்டு வந்த கடவுள் நம்பிக்கை முதல் சாத்திரங்கள், இலக்கியங்கள், நடைமுறைகள் ஈறாக அத்தனையையும் சாடிச் சாடி மக்களைத் தட்டி எழுப்பினார்; வகுப்புரிமைக்கும் தொடர்ந்து வாதாடினார்.

விழிப்புற்ற, மான உணர்வு பெற்ற மக்கள் முதலில் 1929இல் செங்கற்பட்டில், மாகாண மாநாட்டில் கூடினார்கள். அடுத்த ஆண்டு ஈரோட்டு மாகாண மாநாட்டில் கூடினார்கள்.

இதற்கிடையில், ஈ.வெ.ரா.வின் சிந்தனை மேலும், மேலும் விரிந்து கொண்டே இருந்தது. வகுப்புரிமை என்பதும், இடைக் கால நிவாரணமே; அது தேவையானதாயினும், நீண்ட காலச் சமூக நலனுக்குப் போதாது என்பது அவருக்குத் தெளிவாயிற்று. பின் எது தேவை? இக்கேள்விக்கும் பதிலைக் கண்டு பிடித்து விட்டார். புரட்சிச் சிந்தனையாளராகிய ஈ. வெ. ராமசாமி. அதை ஈரோட்டு மாநாட்டின் முடிவில் நன்றியுரை கூறிய போது, ஈ. வெ. ரா வெளிப்படுத்தினார்.

1916இல் நீதிக் கட்சி தொடங்கிய போது, பொது உடைமைக் கொள்கையின் சமதர்மக் கோட்பாடும், கருத்து மண்டலத்தோடு நின்றிருந்தது.

1917 அக்டோபரில் உலகைக் குலுக்கிய புரட்சி நடந்தது. அதன் விளைவாக, உலகத்தின் முதல் சமதர்ம பாட்டாளி ஆட்சி உருவாயிற்று. சில நாட்களில் தொடங்கிய எதிர்ப் புரட்சியும், பின்னர் மூண்ட பதினான்கு வல்லரசுகளின் தாக்குதல்களும், புதிய ஆட்சியை அலைக்கழித்தது. அவை தோற்று, அமைதி நிலவி, சோவியத் ஒன்றியம் உருவாக சில காலமாயிற்று.

எனவே, தமிழ்நாட்டு முற்போக்காளர்கள், ‘இந்நாட்டு நோய்க்கு உள்நாட்டு மருந்தாகிய வகுப்புரிமை’ ஒன்றிலேயே நாட்டமாயிருந்தார்கள். செங்காய் நிலையாகிய அதையும் தாண்டி, சமதர்ம வழியில் சிந்தனையைச் செலுத்திய முன்னோடிகளில் ஒருவர் ஈ. வெ. ராமசாமி ஆவார்.

சிலரே படித்தவர்களாக, அரசு ஊழியத்தை நாடுபவர்களாக நிலைமை இருக்கும் வரை, வகுப்புரிமைக் கொள்கையின் நடை முறையே போதும். அது முழு வளர்ச்சியல்லவே! அது சமத்துவ நிலையாகாதே!((nop))