பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

பெரியாரும்‌ சமதர்மமும்‌

கடைக்கோடியில் இருப்பவரும், எல்லாம் பெறும் நிலையல்லவா முதிர்ந்த சமத்துவ நிலை? அந்நிலையொன்றே எல்லோரையும் வாழ வைக்கும் என்பதை 1930இன் தொடக்கத்திலேயே, ஈ.வெ. ராமசாமி உணர்ந்தார்; உலகறிய உரைத்தார்.

ஈரோட்டு மாநாட்டு நன்றியுரையில், புரட்சியாளர் ஈ.வெ. ராமசாமி கூறியதைப் பார்ப்போம்:

‘இந்த (தன்மான) இயக்கமானது, இன்றைய தினம் பார்ப்பனரையும், மதத்தையும், சாமியையும், பண்டிதர்களையும் கண்டித்துக் கொண்டு, மூடப்பழக்க வழக்கங்களையும் எடுத்துக் காட்டிக் கொண்டு, மூட மக்களைப் பரிகாசம் செய்து கொண்டிருப்பது போலவே, என்றைக்கும் இருக்குமென்றோ அல்லது இவைகள் ஒழிந்தவுடன் இயக்கத்திற்கு வேலையில்லாமல் போய் விடுமென்றோ யாரும் கருதி விடக் கூடாது என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

‘மேற்சொன்னவைகளின் ஆதிக்கங்கள் ஒழிவதோடு, ஒருவன் உழைப்பில் ஒருவன் நோகாமல் சாப்பிடுவது என்கிற தன்மை இருக்கிற வரையிலும், ஒருவன் தினம் ஒரு வேளைக் கஞ்சிக்கு மார்க்கமில்லாமல் பட்டினி கிடந்து சாவதும், மற்றொருவன் தினம் அய்ந்து வேளை சாப்பிட்டு விட்டுச் சாயுமான நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, வயிற்றைத் தடவிக் கொண்டிருக்கிறதுமான தன்மை இருக்கிற வரையிலும், ஒருவன் இடுப்புக்கு வேட்டியில்லாமல் திண்டாடுவதும், மற்றொருவன் மூன்று வேட்டி போட்டுக் கொண்டு உல்லாசமாகத் திரிவதுமான தன்மை இருக்கிற வரையிலும், பணக்காரர்கள் எல்லாம் தங்கள் செல்வம் முழுவதையும் தங்களது சுக வாழ்வுக்கே ஏற்பட்டது என்று கருதிக் கொண்டிருக்கிற தன்மை இருக்கிற வரையிலும், சுயமரியாதை இயக்கம் இருந்தேதான் தீரும்’ என்று அறிவித்தார். இந்த அறிவிப்பின் வழியாக சுயமரியாதை இயக்கம் சென்றடைய வேண்டிய கோட்டையும், அன்றைக்கே சுட்டிக் காட்டினார்,

ஈ.வெ.ராமசாமி தன்னேரிலாத சிந்தனையாளர், பேச்சாளர் எழுத்தாளர் ஆவார். மேடையேறியதும், மின்னும் கருத்தைச் சொல்லி விட்டுப் பாராட்டுக்குக் காத்திருப்பவர் அல்லர் அவர். சொல்லுகிற கருத்தின் ஆழத்தையும், பரப்பையும் உணர்ந்தே சொல்லுவார். சமதர்ம இயக்கம் பற்றி ஈ. வெ. ராமசாமி கொண்டிருந்த கருத்து ஆழமானது.