32
பெரியாரும் சமதர்மமும்
கடவுள் மறுப்பு இல்லாமல், செல்வ ஏற்றத் தாழ்வு எதிர்ப்பை நியாயப்படுத்த முடியாது.
எல்லாம் அறிந்த, எல்லாம் வல்ல, எல்லாரையும் படைத்த ஒருவன் என்கிற கற்பனையை ஏற்றுக் கொண்டால், அவன்தான் ஆயிரம் பேர்களைக் கோடீசுவரர்களாகப் படைத்தான்; அறுபது கோடி மக்களை ஏழைகளாகப் படைத்தான் என்று புரோகிதர் புளுகுவதையும் ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும்.
அப்படியானால், அடுத்து கையிலுள்ள நாலு காசையும் அர்ச்சகருக்கு அழுது விட்டு, அடுத்த பிறவியில், இலட்சுமி கடாட்சம் பெறலாம் என்று நம்பிக் கிடக்க வேண்டியதுதானே! ‘தலைவிதி முன்னை வினைப் பயன்’ என்பது மன நோய். அதன் வெளிப்பாடு ஏழ்மையை ஏற்றல்; உயர் சாதித் தன்மைக்கு உடன்படல்.
பிறவியால் ஏற்படுவதாகச் சொல்லப்படும் சாதி உயர்வு தாழ்வு, சட்டத்தால் வளர்த்துக் காப்பாற்றப்படும் பணக்கரார், ஏழைத் தன்மையும் நச்சு மரங்களுக்கு ஒப்பானவை. அவற்றின் ஆணி வேர்களாவன: சமய நம்பிக்கை, முன் வினைப் பயன், தலை விதி என்பவை. அவை உயிர்த் துடிப்போடும் வீறோடும் இருக்கும் வரை, சாதி ஏற்றத் தாழ்விலிருந்து விடுபட்டுக் கரையேறுவது இயலாது; எல்லார்க்கும் எல்லாம் கிடைப்பதான நல்ல சமதர்ம சமுதாயத்தை உருவாக்க முடியாது.
அந்நம்பிக்கையை அடியோடு புரட்டித் தள்ளி விட்டால், அவற்றின் கிளைகளும், கொப்புகளும் எளிதில் ஒடிந்து சாம்பலாகி விடும்.
எனவே, சுயமரியாதை இயக்கம் மேலெழுந்த வாரியாகப் பேசி விட்டும், எழுதி விட்டும் காலந் தள்ளவில்லை. நுனிப் புல் பேச்சுக்களாலும், எழுத்துக்களாலும் கிடைக்கும் செல்வாக்கில் திளைத்துக் கிடக்கவில்லை. ஈராயிரம் ஆண்டுகளாக ஆழப் பதிந்துள்ள சமய நம்பிக்கைகள், கோதானம், கன்னிகாதானம் முதலிய மூடப்பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைச் சாடும் பணியும், தேவையான அடிப்படைப் பணியாயிற்று.
நம் சிந்தனையில் இணைந்து விட்ட மூட நம்பிக்கைகளை நீக்கித் துப்புரவாக்குவதைக் காட்டிலும், இளமைப் பருவத்தில் அவை சேராதபடி தடுத்தல் பெரும் பயன் விளைக்கும். இதை உணர்ந்த சுயமரியாதைக்காரர்கள் 1930 மே திங்கள் ஈரோட்டில்