பகத்சிங்கும் பெரியாரும்
35
விடுதலை பெற வேண்டிய நிலப்பரப்பு; அவ்விடுதலையைப் பயன்படுத்தி, அத்தனை மக்களுக்கும் நல்வாழ்வு, முழு வாழ்வு கொடுக்க வேண்டிய நாடு. அதற்கான இயற்கை வளங்களைப் பெற்றுள்ள இந்தியா, மக்கள் சிந்தனை வளத்தையும் பெற வேண்டும்; பழைய அறிவுக் கட்டுகளிலிருந்து விடுபட வேண்டும்; தனியுடைமைப் பற்றிலிருந்து விடுபட வேண்டும்.
சுருங்கச் சொன்னால், சமதர்மத் தத்துவம் பகத்சிங்கின் இலட்சியம். பொது உடைமை அவர் ஏற்றுக் கொண்ட நடைமுறை.
விலை மதிப்பிட முடியாத பகத் சிங்கின் தியாகம், இந்தியப் பொது வாழ்க்கையிலிருந்து, தெளிவுள்ள முற்போக்குவாதியை, உறுதியான உண்மையான தொண்டனை இளமையிலேயே தட்டிப் பறித்து விட்டது. சமதர்ம இயக்கத்திற்கும், பகுத்தறிவு இயக்கத்திற்கும், அது பேரிழப்பாகும்.,
அப்பேரிழப்பு, எண்ணற்றவர்களின் உள்ளங்களை உலுக்கிற்று. புரட்சியாளர் பெரியார், நாத்திகவாதி பெரியார், இவ்விரு கொள்கைகளுக்காகவும் உயிர் விட்ட இளம் பெரியார் பகத் சிங்கை இனம் கண்டு, துணிவோடு உலகறியப் பாராட்டினார்.
தந்தை பெரியாரின் புரட்சி இதழாக விளங்கிய ‘குடியரசில்’ 29-3-1931 வெளியீட்டில் அவர் எழுதிய தலையங்கத்தைப் பார்ப்போம்.
‘இந்தியாவுக்குப் பகத்சிங் கொள்கைதான் உண்மையாக வேண்டியது என்பது நமது பலமான அபிப்பிராயம் ஆகும்.’ இப்படித் திட்டவட்டமாக அறிவிக்கிறது அத்தலையங்கம். அப்புறம்?
‘அவர் (பகத் சிங்) தனது கொள்கையை நிறைவேற்றக் கைக்கொண்ட முறைகளில் சிறிது தவறு நேர்ந்து விட்டது என்பதாக நம் புத்திக்குத் தோன்றிய போதிலும், அவருடைய கொள்கை குற்றமுடையது என்று சொல்ல, நாம் ஒருக்காலும் துணியவே மாட்டோம். அதுவேதான், உலகத்தின் சாந்த நிலைக் கொள்கையும் ஆகும். நாம் அவரை (பகத் சிங்கை) உண்மையான மனிதர் என்று சொல்லுவோம்’ என்று ஒப்புதல் முத்திரையைப் பதிப்பித்தார்.