பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

பெரியாரும்‌ சமதர்மமும்‌

மிகச் சிக்கலான கோட்பாடுகளை, எவர்க்கும் எளிதில் புரியும் வண்ணம் எடுத்துக் காட்டுவதில், ஈ. வெ. ராமசாமிக்கு இணை அவரேதான். பகத் சிங் ஏற்றுக் கொண்ட பொது உடைமைக் கொள்கையை ஏன் ஆதரிக்க வேண்டும்? பெரியாரின் சொற்களாலேயே தெளிவு பெறுவோம். பெரியார் கூற்று இதோ:

‘நாம் தீண்டாமை ஒழிய வேண்டுமென்று சொல்லுவதில் என்ன தத்துவம் அடங்கியிருக்கிறதோ, அதுதான் மக்களின் ஏழ்மைத் தன்மையை ஒழிக்க வேண்டுமென்பதிலும் அடங்கி இருக்கின்றது.

தீண்டாமை ஒழிவதாயிருந்தால், எப்படி மேல் சாதி, கீழ்ச் சாதி தத்துவம் ஒழிந்துதான் ஆக வேண்டுமென்கிறோமோ அது போலவேதான், ஏழ்மைத் தன்மை ஒழிவதாயிருந்தால், முதலாளித் தன்மை, கூலிக்காரத் தன்மை ஒழிந்துதான் ஆக வேண்டும் என்கிறோம். இந்தத் தன்மைகள் மறைபடுவதுதான் சமதர்மத் தன்மை, பொதுஉடைமைத் தன்மை என்பவைகளே ஒழிய வேறில்லை,’

சமதர்மப்—பொது உடைமை பற்றி நம் சூழ்நிலைக்கேற்ப விளக்கம் தந்த பெரியார், பகத் சிங்கின் உயிர்த் தியாகத்தை எப்படிப் பாராட்டினார் என்று பார்ப்போம்.

‘பகத் சிங் இந்திய மக்களுக்கு, ஏன் உலக மக்களுக்கே உண்மையான சமத்துவமும், சாந்தியும் அளிக்கத் தக்க பாதையைக் காட்டுவதற்குப் பயன்படத் தக்கதாக, தனது உயிரை விட நேர்ந்தது.

‘சாதாரணத்தில், வேறு எவரும் அடைய முடியாத பெரும் பேறு என்று சொல்லி, பகத் சிங்கை மனமார, வாயார, கையாரப் பாராட்டுகின்றோம்! பாராட்டுகின்றோம்! பாராட்டுகின்றோம்!’ என்று குடியரசுத் தலையங்கத்தில் எழுதினார்.

சோவியத் நாட்டில் சுற்றுப் பயணஞ் செய்து விட்டு வரும் முன்பே, பெரியார் சமதர்மக் கொள்கையில் எவ்வளவு தெளிவும், உறுதியும் கொண்டிருந்தார் என்பதை இத்தலையங்கம் எடுத்துக் காட்டுகிறது.

அது மட்டுமா? பகத் சிங்கின் நடைமுறை ‘வன்முறை’ என்று சாக்குச் சொல்லி, பலர் நழுவப் பார்த்த வேளையில்,