பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

பெரியாரும்‌ சமதர்மமும்‌

ஆபத்து!’ என்று கதறுவதாலும், பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரவாதபடி, அணைத்து விடலாமென்று மனப்பால் குடித்தார்கள். அது பலிக்காது போன போது, சாபமிட்டுப் பார்த்தார்கள்.

அதை எவரும் பொருட்படுத்தாததைக் கண்டு, ‘தேசபக்தி’ப் போர்வையில் பதுங்கினார்கள். பிஞ்சு தேச பக்தர்களைக் கொண்டு, மேடைதோறும் தன்மான இயக்கத்தவர்களை, ‘தேசத்துரோகி’கள் என்றும், வகுப்புவாதிகள் என்றும் ஓயாது பழித்தார்கள்; புதுப்புது அவதூறுகளைப் பொய்களை புனைந்து, பரப்பி அலுத்தார்கள். திட்டமிட்டு, முடுக்கிவிடப்பட்ட பழியையும், தூற்றலையும் தாங்கிக் கொண்டு, தன்மான இயக்கம் உயிரோடு இருந்தது; இருக்கிறது. அவ்வுயிர்ச் சக்தியின் இரகசியம் என்ன?

மூவாயிரம் ஆண்டுகளாகப் பாடுபடும் மக்கள், தாழ்த்தப்படும் தன்மையையும், ஏழ்மைப் படுத்தப்படும் தன்மையையும், விரட்டும் விடி வெள்ளி தேவைப்பட்டது. அவ்விடி வெள்ளியாகத் தன்மான இயக்கம் முளைத்தது.

அது குறைப் பிரசவம் அல்ல; முதிர்ந்து பிறந்த இயக்கம்; கோடி,கோடி மக்களை நிமிர வைத்த இயக்கம்; மானமூட்டிய இயக்கம்; எதிர்காலம் பற்றிய நம்பிக்கையூட்டிய இயக்கம். தாழ்த்தப்படுதல், வறுமையில் தள்ளப்படுதல் ஆகிய இரு கொடுமைகளையும் தகர்த்தெறியப் புறப்பட்ட இயக்கமாகத் தன்மான இயக்கம் செயல்பட்டு வருகிறது.