பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

பெரியாரும்‌ சமதர்மமும்‌

அறிஞர்களில் சிலர், புது வழிகளில் சிந்தனையைச் செலுத்தினார்கள். அக்காலத்தில் உலகளாவியிருந்த தனியுடைமை முறையைப் பற்றிச் சிந்தித்தார்கள். அதன் தீய விளைவுகளை இனம் கண்டு கொண்டார்கள்.

தனியுடைமை, முதலாளித்துவம் மானுடத்தின் வளர்ச்சியில் சில நிலைகள் அவ்வளவே! இவையே முடிவான நிலைகள் அல்ல. இந்நிலையைத் தாண்டி, மானுடம் வளர வேண்டும்.

எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும் நிலை, வெறும் அவாவல்ல. மனித இன ஆற்றலுக்குட்பட்டதே. இந்நிலையைப் பெறுவதற்குத் தேவையான இயற்கை வளம் உண்டு. அதை முழுமையாகப் பயன்படுத்தப் போதுமான உழைக்கும் கரங்கள் உள்ளன. அதற்கேற்ற, அறிவுப் பெருக்கத்திற்குக் குறைவில்லை; நுட்பத் திறனும் பெற முடியும். அடிப்படைத் தேவை ஒன்றே ஒன்று. அது என்ன? மாற்று முறை.

தனித் தனிக் கணக்குகளில் வைத்துக் காக்கும் பல்வகைச் சொத்துக்களைப் பொதுக் கணக்கில் கொண்டு வந்து விடல்; பொதுவாகக் காத்தல்; நிர்வகித்தல்; எல்லோரும் பங்கு போட்டுக் கொண்டு உழைத்தல்; எல்லோரும் பங்கு போட்டுக் கொண்டு துய்த்தல். இம்மாற்று முறைக்குப் பெயர் பொது உடைமை.

பொது உடைமைச் சமுதாயத்தை, எல்லோரும் சேர்ந்து நிர்வகிப்பார்கள். அங்கே உயர்ந்தோர் இரார்; தாழ்ந்தோர் இரார்; குபேரர் இரார்; அன்னக் காவடிகள் இரார்; அறிஞர்கள் இருப்பர்; ஆனால் தற்குறிகள் இரார். அத்தகைய புதிய, பொதுஉடைமைச் சமுதாயம் சில அறிஞர்களின் அறிவில் புலப்பட்டது. அதோடு நின்றதா? இல்லை. பொது உடைமை அறிக்கையாக உருவாயிற்று.

1847இல் இலண்டனில் பொது உடைமை வாதிகள் சிலர் கூடினார்கள்; கலந்து பேசினார்கள். அறிக்கையொன்றை உருவாக்கினார்கள். அதன் பெயர் என்ன? ‘கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ’ (பொதுவுடைமை அறிக்கை) என்பதாகும்.

காரல் மார்க்சும், எங்கல்சும், மற்றும் சில அறிஞர்களும் இவ்வறிக்கையை வெளியிட்ட போது, உலகம் விழிப்படையவில்லை. கோடிக்கணக்கானோர் அதைப் பொருட்படுத்தவே-