48
பெரியாரும் சமதர்மமும்
மாநாடு கூடினது இலண்டன் பட்டினமாய் இருந்தாலும், அதற்கு அப்பொழுதே கிளர்ச்சி நடந்தது பிரான்சு நாடாயிருந்தாலும், அது முதன் முதல் அனுபவத்தில் கொண்டு வர முயற்சிக்க வேண்டிய இடம் இரஷ்யாவாகவே ஏற்பட்டு விட்டது, சிலருக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கக் கூடியதாயிருந்தாலும், அந்தப்படி ஏற்படுவதற்கு நியாயமில்லாமலில்லை.
‘என்ன நியாயம் என்று வாசகர்கள் கேட்பார்களானால், அதற்கு நமது பதிலாவது: எங்கு அளவுக்கு மீறிய—தாங்க முடியாத கொடுமை நடைபெறுகின்றதோ, அங்குதான் சீக்கிரத்தில் பரிகார முயற்சி கொண்டு எழவும், சீக்கிரத்தில் இரண்டிலொன்று காணவுமான காரியங்கள் நடைபெறும்?
‘எனவே, இந்த நியாயப்பட பார்ப்போமானால், உலக அரசாங்கங்களிலெல்லாம், இரஷ்ய சார் அரசாங்கமே மிக்க கொடுங்கோன்மையாக நடைபெற்று வந்திருக்கிறது. அதனாவேயே அங்கு சமதர்ம முறை அனுபவத்திற்குக் கொண்டு வர வேண்டியதாயிற்று…’ என்று விளக்கந் தந்தார்.
‘இந்தியாவின் நிலை அதை விட மோசமாயிற்றே. இங்கு ஏன் சமதர்மம் நடைமுறைக்கு வரவில்லை’ என்ற அய்யங்கள் எழுவது இயற்கை. இவற்றை எதிர் பார்த்து, அவர் இவற்றிற்கும் பதில் சொல்லுவதைக் கவனிப்போம். இதோ பெரியார் பதில்:
‘இந்த நியாயப்படி பார்த்தால், அவ்வித சமதர்ம உணர்ச்சி உலகில் இரஷ்ய தேசத்தை விட, இந்தியாவிற்கே முதன்முதலாக ஏற்பட்டிருக்க வேண்டியதாகும். ஆனால், அந்தப்படி ஏற்படாமல் இருப்பதற்கு, இங்கு அநேக வித சூழ்ச்சிகள் நடைபெற்று வந்திருப்பதாலும், சூழ்ச்சிக்காரர்கள் இந்திய மக்களை வெகு ஜாக்கிரதையாகவே கல்வி, அறிவு, உலக ஞானம், சுய மரியாதை உணர்ச்சி முதலியவைகள் பெறுவதற்கு வழி இல்லாமல், காட்டு மிராண்டித் தன்மையில் வைத்து வந்ததோடு, கடவுள் பேராலும், மதத்தின் பேராலும் ஏற்படுத்தப்பட்ட உணர்ச்சியானது, அடிமையாக இருப்பதே கடவுள் சித்தமென்றும், மோட்ச சாதனமென்றும் புகட்டி வந்ததாலும், அதே சூழ்ச்சிக்காரர்கள் வேற்றரசர்களை அழைத்து வந்து, மக்களை மிருகத்தனமான ஆதிக்கத்தால் அடக்கியாளச் செய்து வந்ததாலும், உலகில் சமதர்ம உணர்ச்சி முதன் முதல் இந்தியாவிலேயே ஏற்பட்டிருக்க வேண்டியது மாறி, இரஷ்யாவிற்கு முதலிடம் ஏற்பட வேண்டியதாயிற்று.’