பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11. சுயமரியாதை சமதர்மக்கட்சி
தோற்றம்

விருதுநகரில் நடைபெற்ற மூன்றாவது சுயமரியாதை வாலிபர் மாநாட்டில், பொது உடைமைக் கொள்கையும், சமதர்மக் கோட்பாடும் குறிக்கோளாக ஏற்றுக் கொள்ளப்பட்டதால், ‘சமதர்ம அறிக்கை’யை ‘குடியரசு’ வெளியிட்டு, மக்களிடையே பரப்பிற்று. அக்காலக் ‘குடியரசு’ விற்பனையில், இக்கால வார இதழ்களுக்கு அருகில் கூட வர முடியாது. ஆனால் பலனில்? அவைகளை விடப் பத்துப் பங்காக வேலை செய்தது என்பது மிகையல்ல.

குடிஅரசின் வழியாகவும், பொது மேடைகளிலிருந்தும், சமதர்மக் கொள்கை விரைந்து பரவிற்று. அந்நிலையில், திரு.ஈ.வெ. ராமசாமி, திரு. எஸ். இராமநாதன், திரு. இராமு ஆகியவர்களை அழைத்துக் கொண்டு, கப்பலில் மேனாட்டுப் பயணத்தை மேற்கொண்டார். 13-12-1931 அன்று புறப்பட்ட பெரியார், 1932 நவம்பர் கடைசியில் தாயகம் திரும்பி வந்தார்.

எகிப்து முதல் சோவியத் நாடு வரை, பல நாடுகளைச் சுற்றிப் பார்த்தார். பிற நாடுகளில், பொது மக்கள் ஒருவரை ஒருவர் மதித்து நடந்து கொள்வதையும், தெருக்கள், பூங்காக்கள் போன்ற பொதுவிடங்களைத் துப்புரவாக வைத்திருப்பதையும் நேரில் அறிந்து வந்தார்.

அந்த அயல் நாட்டுப் பயணத்தில், பெரியார் நீண்ட காலம் தங்கியது சோவியத் நாட்டில்தான்; உலகத்தின் முதல் சமதர்ம நாட்டில்தான். சோவியத் நாட்டில், பெரியார் பாலர் பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரை, பல கல்வி நிலையங்களைப் பார்த்தார்; கூட்டுறவுப் பண்ணைகளைப் பார்த்தார்; நாட்டுடமையான பெருந் தொழிற்சாலைகளைக் கண்டார். கலையரங்குகள், அரும் பொருட்காட்சிகள் பெரியாரின் பார்வையில் வந்தன.

சோவியத் நாடு பெரியாரைப் பெரிதும் கவர்ந்தது. எல்லோர்க்கும் வாழ்வு கிட்டத் தொடங்கி விட்டதை நேரில் உணர்ந்து கொண்டார். அந்நாட்டில், மிகப் பெரிய மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது அவருக்குப் புலனாயிற்று.