பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுயமரியாதை சமர்மக் கட்சி தோற்றம்

51

கோட்பாடாக ஏற்றுக் கொண்ட சமதர்மக் கொள்கையின் சிறப்பையும், நன்மையையும் பெரியார் நேரில் தெரிந்து கொண்டார். அதை இந்தியாவில் பரப்ப வேண்டுமென்னும் ஆர்வத்தோடு, திரும்பி வந்தார்.

ஈரோட்டிற்குத் திரும்பி வந்த ஒரு திங்களில், சுயமரியாதைத் தொண்டர்கள் கூட்டத்தை ஈரோட்டில் கூட்டினார் பெரியார். அச்சிறப்புக் கூட்டத்திற்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த தோழர் மா.சிங்கார வேலரை அழைத்தார். பிந்தியவர், அக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனைகள் கூறினார்.

ஈரோட்டில் இரு நாள்கள் சுயமரியாதைத் தொண்டர்கள் கலந்துரையாடினார்கள். கூட்ட முடிவில் என்ன முடிவுக்கு வந்தார்கள்?

சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளை, நடைமுறைப் படுத்தும் பொருட்டு, அரசியல் கிளை ஒன்று தேவை. எனவே, ‘சுயமரியாதை—சமதர்மக் கட்சி’யொன்றை தொடங்க வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது. அக்கட்சிக்கு இலட்சியங்கள் என்ன? வேலைத் திட்டங்கள் எவை?

இவற்றைப் பற்றியும் முடிவு எடுத்தார்கள். சமதர்ம சமத்துவ சமுதாயத்தில், தன்னாட்சி உரிமை கொண்டிருப்பது இன்றியமையாதது. அரசியல் உரிமை இல்லாத போது, சமதர்மம் பற்றியும், சமத்துவம் பற்றியும் பேசுவது வெறும் அறிவுலக விளையாட்டாகவே நின்று விடும். இதை உணர்ந்த சுயமரியாதைத் தொண்டர்கள் அது பற்றியே, முதலில் முடிவு செய்தார்கள்.

1931ஆம் ஆண்டு டிசம்பர் 28, 29 நாள்களில் அவர்கள் ஈரோட்டில் கூடிய போது, இந்தியா அடிமைப்பட்டிருந்தது; ஆங்கில ஆட்சியில் சிக்கிக் கிடந்தது. அந்நிலை தன்மான இயக்கத்தவர்களுக்கு உடன்பாடா? இல்லை. இதோ அது பற்றி அவர்கள் செய்த முடிவு:

‘பிரிட்டிஷ் முதலிய எந்த வித முதலாளித் தன்மை கொண்ட ஆட்சியிலிருந்தும், இந்தியாவைப் பூரண விடுதலை அடையச் செய்வது.