12. சுயமரியாதை சமதர்ம
வேலைத் திட்டம்
தென்னம்பிள்ளை—இளங்கன்று; நட்ட குழியைச் சுற்றி வேலி போடுகிறோம். ஏன்? இளம் பிள்ளையை, ஆடு மாடுகள் கடித்து விடக் கூடாது என்பதற்காக. விளையாட்டுப் பிள்ளைகள் ஒடித்து, பிய்த்து விடக் கூடாது என்பதற்காக.
தென்னம் பிள்ளை வளர்ந்து மரமாகி விட்ட பின்? அதில் ஆடு, மாடுகளைக் கட்டி வைக்கிறோம்.
இளம் நிலையில் இருந்த சமதர்ம ஆட்சியில், ‘சுகஜீவி’களாக இருந்தவர்களுக்கு, வாக்குரிமை மறுக்கப்பட்டது, வெறும் பாதுகாப்பு ஏற்பாடே; இன்றியமையாத பாதுகாப்பு ஏற்பாடே.
அவ்வழியைப் பின்பற்றியதால்தான், சோவியத் ஆட்சி தழைக்க முடிந்தது. எல்லோரும் வேலை செய்து வாழும் நிலை வந்ததும், ‘பாட்டாளிகள் சர்வாதிகாரம்’ என்னும் சொற்றொடர் கை விடப் பட்டது; எல்லோருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது.
1932 டிசம்பரில், ஆங்கிலேயர்கள் ஆண்ட இந்தியப் பகுதியையும், இந்திய மன்னர் ஆண்ட பகுதியையும் விடுவித்து, உடலுழைப்போர் ஆட்சியில் ஒப்படைக்க வேண்டுமென்று சுயமரியாதை சமதர்மத் திட்டம் கூறிற்று.
அப்படி உழைப்போர் ஆட்சி அமையும் போது, அது என்னென்ன செய்ய வேண்டும்? அவற்றையும், தன்மான இயக்கத் தோழர்கள் திட்டவட்டமாக அறிவித்தார்கள்.
உழைப்போர் ஆட்சி, சமதர்ம வாழ்க்கை முறையை உருவாக்கும் கருவி, சமதர்ம முறைக்கு அடிப்படை, நாட்டின் உற்பத்திச் சாதனங்கள் நாட்டின் பொது உடைமையாதல்.
உற்பத்திச் சாதனங்கள் எவை? தொழிற்சாலைகள். இன்னும் என்ன? விளைநிலங்களும், காடுகளும்.