சுயமரியாதை சமதர்ம வேலைத் திட்டம்
55
கூட்டுப் பண்ணையாக்கிப் பயிரிடுதல். அதற்குப் பெயர் கூட்டுப் பண்ணை முறை. அதிலிருந்து, எவரும் பிற்காலத்தில் துண்டு நிலத்தைப் பிரித்துக் கொண்டு போக முடியாது.
1930 இன் தொடக்கத்திலேயே, சோவியத் நாட்டில் கூட்டுப் பண்ணைகளை அமைப்பதில் முனைப்பு காட்டப்பட்டது. அதைப் பார்த்து விட்டு வந்த பெரியாரின் திட்டம், கடைசி ‘மாடலை’ பின்பற்றச் சொல்லிற்று போலும்.
திட்டத்தின் அய்ந்தாவது படி என்ன?
‘குடியானவர்களும், தொழிலாளிகளும் லேவாதேவிக்காரர்களிடம் பட்டிருக்கும் கடன்களையெல்லாம் செல்லுபடியற்றதாக்கி விடுவது.’ நிலங்களை நாட்டுடைமையாக்கி விட்டால், கடன்களைத் தள்ளி விடுவதும் அதில் சேர்வதே முறை.
அடிமை ஒப்பந்தங்களை ரத்து செய்து விடுவது. 1932லேயே சுயமரியாதை சமதர்ம இயக்கம் காட்டிய குறிக்கோளை, 1976இல்தான் நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி, நடைமுறைப் படுத்த முயற்சி நடந்தது. எவ்வளவு வெற்றி பெற்றதோ?
நாட்டுடைமையான தொழிற்சாலைகள், தொழிலாளர்களைப் பழையபடி கசக்கிப் பிழிவது முறையாகாது. அவை தொழிலாளர், பொதுமக்கள், நுகர்வோர் ஆகியோர் நலன்களைப் பேண வேண்டும். அதைச் செய்யும் வழியை ஈரோட்டுத் திட்டம் காட்டுகிறது.
‘தொழில் செய்பவர்கள் ஏழு மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யக் கூடாது.
அவர்கள் வாழ்க்கை நிலை உயர்த்தப்படுவது.
தொழிலாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி, அவர்களது சுக வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகளையும், இலவச நூல் நிலையங்கள் முதலிய வசதிகளையும் ஏற்படுத்துவது.’
இவை தொழிலாளர் நலனைப் பேணுவது ஆகும்.
பொதுமக்கள் நலனை எப்படிப் பேணுவது?
தொழில் இல்லாமல் இருக்கின்றவர்களை, அரசு பராமரிக்கும்படி செய்வதால்.