பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

பெரியாரும்‌ சமதர்மமும்‌

20-3-1929 அன்று இந்திய ஆங்கில ஆட்சி, மேற்கூறிய முப்பத்திரண்டு செயல் வீரர்களைக் கைது செய்தது. மார்க்சிய—லெனினியக் கொள்கைக்காரர்களாகிய அவர்கள், இந்தியாவில் இயங்கிக் கொண்டிருந்த பிரிட்டானிய மன்னர் ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டார்கள்.

வழக்கு விரைவில் முடியவில்லை. நாற்பத்தைந்து திங்கள் போல் நீண்டது. அவ்வளவு காலமும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் வாட நேர்ந்தது.

இறுதியில் முடிவு சொல்லப்பட்டது. அய்வர் விடுதலை செய்யப்பட்டார்கள். மற்ற இருபத்தேழு பேர்களும், தண்டிக்கப்பட்டார்கள். சிலருக்கு மூன்றாண்டு சிறை. இருபது ஆண்டு சிறைத் தண்டனை பெற்றவர்களும் உண்டு.

இம்முடிவைக் கேட்ட பெரியார், தமது ‘குடிஅரசு’ வார இதழில் உணர்வூட்டும் தலையங்கம் தீட்டினார். 22-1-1933 அன்றைய குடி அரசு கூறுவதைப் படிப்போம்.

‘இந்த இருபத்தேழு பேர் மாத்திரமல்ல; இன்னும் ஒரு இருநூற்று எழுபது பேர்களைச் சேர்த்துத் தூக்கில் போட்டிருந்தாலும் சரி, நாம் அதற்காகக் கவலைப்படப் போவதில்லை’.

‘ஏனென்றால், இந்தத் தோழர்கள் சிறையில் இருப்பதாலோ, தூக்கிலிடப்படுவதாலோ அவர்களுடைய கொள்கையாகிய பொது உடைமைக் கொள்கை என்பது, அதாவது முதலாளிகளின் ஆட்சியைச் சிதைத்து நசுக்கி, சரீரத்தினால் பாடுபடுகின்ற மக்களுடைய ஆட்சிக்கு, உலக அரசாங்கங்களையெல்லாம் திருத்தி அமைக்க வேண்டும் என்கிற கொள்கையோ, உணர்ச்சியோ அருகிப் போய் விடும் பயம் நமக்கில்லை’ என்று பறை சாற்றிற்று.

அந்த நம்பிக்கைக்குக் காரணம் என்ன? குடிஅரசின் சொற்களாலேயே அறிவோமாக. இதோ அச்சொற்கள்:

‘இத்தொண்டர்கள் சிறையில் வதியும் ஒவ்வொரு விநாடியும், அவர்களது கொள்கையானது 1, 10, 100, 1000 கணக்கான தொண்டர்களைத் தட்டி எழுப்பி ஊக்கப்படுத்திக் கொண்டேதான் இருக்கும்.

பொது உடைமைக் கொள்கை என்பதை 27 பேரைத் தண்டித்தோ அல்லது 27 லட்சம் பேரைச் ‘சமணர்களைக்