மீரத் சதிவழக்கு: பெரியாரின் கண்டனம்
59
கழுவேற்றியது’ போல, நடுத் தெருவில் நிறுத்திக் கழுவேற்றிக் கொன்றோ, அடக்கி விடலாம் என்று நினைப்பது, கொழுந்து விட்டெரியும் பெரும் நெருப்பை, நெய்யை விட்டு அணைத்து விடலாம் என்று எண்ணுவது போல்தான் முடியும்.
‘ஆகவே, மீரத்து முடிவை நாம் மேளதாளத்தோடு வரவேற்பதுடன், தண்டனை அடைந்த தோழர்களை மனமார, வாயார, கையாரப் பாராட்டுகிறோம்; முக்காலும் பாராட்டுகிறோம். நமக்கும், நம் போன்ற வாலிபர்களுக்கும், இப்பெரும் பேறு கிடைக்கப் பெறும் நிலையை அடைய முடியவில்லையே என்று வருந்தி, மற்றுமொரு முறை பாராட்டுகிறோம்.’
எழுச்சியூட்டும் இத்தலையங்கம் மக்கள் மனதைக் கவர்ந்தது. இதைப் பற்றி எங்கும் பேசப்பட்டது.
ஈரோட்டு முடிவையொட்டி, பெரியாரும், அவருடைய இயக்கத் தோழர்களும் பொது உடைமைக் கோட்பாட்டினைப் பரப்புவதில், முழு மூச்சோடு ஈடுபட்டார்கள். தன்மான இயக்க இதழ்களில் சமதர்ம மணம் வீசிற்று. பேச்சுக்களில் புரட்சிக் கனல் ஒளி விட்டது.
ஊர் தோறும், சுயமரியாதை சமதர்மச் சங்கத்தினை நிறுவும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது. அக்கால கட்டத்தில், தோழர் ஜீவானந்தம், தன்மான இயக்கத்தில் பங்கு கொண்டார். சாதி ஒழிப்பு, ஏழை பணக்காரத் தன்மை ஒழிப்புக் கொள்கைகளைப் பரப்ப உதவினார்.
இந்தியாவைப் பொறுத்த மட்டில், வறுமைப் படுகுழியில் தள்ளப்பட்டோரும், ஊர்களுக்கு வெளியே ஒதுக்கப்பட்டோரும், சமுதாய இழிவுக்கு ஆளாக்கப்பட்டோரும், அநேகமாக ஒன்றாகவே இருப்பதால், சுயமரியாதை சமதர்மத் திட்டம் சூடு பிடித்தது. விரைந்து பரவிற்று; நூற்றைம்பது கிளைகள் போல் தோன்றின.
பெரியாரின் சமதர்மத் தொண்டை அக்கால அறிஞர் ஒருவர் மதிப்பிட்டு வெளிப்படுத்தினார். அவர் யார்? அவர் தோழர் மா. சிங்காரவேலர். அவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். வாழ்நாள் முழுதும், பொதுவுடைமை வாதியாகவே வாழ்ந்த வழக்கறிஞர். ஈரோட்டில் பெரியாரோடு இருந்து, சுயமரியாதை சமதர்மத் திட்டத்தை உருவாக்கியவர்.