நூலைப் பற்றியும்… நூலாசிரியரைப் பற்றியும்…
பெரியார் ஈ.வெ.ரா. யார்?
கடவுள் மறுப்பாளர்; பார்ப்பனீய வெறுப்பாளர்; சாதி—மதம்—சாத்திரங்களை ஒழிக்கப் போராடிய புரட்சியாளர்; வகுப்புரிமையைப் பெற்றுத் தந்தவர்; தமிழனுக்குச் சுயமரியாதை ஊட்டியவர். பொதுமக்கள் பலரிடமிருந்தும், பெரியாரைப் பற்றிக் கிடைக்கும் மதிப்பீடுகள் இவையாகும்.
ஆனால், இந்தச் சொற்களுக்குள் அடக்கி விட முடியாத வகையில், பெரியாரின் சிந்தனைப் போக்கும், செயலோட்டமும் அமைந்திருந்தன, அது என்ன? தம்முடைய பொது வாழ்வின் தொடக்கக் காலம் தொட்டு, இறுதி மூச்சு வரை அவர் சமதர்மக்காரராகவே வாழ்ந்தார்; செயல்பட்டார். இந்த உண்மையைச் செய்திகளாக நன்கு அறிந்தவர்கள், அவருடைய சமகாலத்தவர்கள். பிற்காலத்தவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்றால், இவையே வரலாறாக வடிவமைக்கப்பட வேண்டும். பெரியாரின் எழுத்தும்—பேச்சும்—செயல்பாடும் —சமதர்மச் சமுதாயம் அமைப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தன. அவர் சமதர்மத்துக்காகப் பாடுபட்ட செய்திகளை, வரலாறாகவே எழுதியுள்ளார் தோழர் நெ து. சுந்தரவடிவேலு அவர்கள்.
தோழர் நெ.து. சுந்தரவடிவேலு என்பவர் யார்?
1912-ஆம் ஆண்டில் செங்கற்பட்டு மாவட்டம், நெய்யாடு பாக்கம் கிராமத்தில், நெ.ச. துரைசாமி—சாரதாம்பாள் வாழ்க்கைத் துணைவர்களுக்குப் பிறந்தவர். 1929-ஆம் ஆண்டில், செங்கற்பட்டில், பெரியார் நடத்திய முதலாவது சுயமரியாதை மாநாட்டுக்கு நேரில் சென்று கண்டு—கேட்டு, உணர்வு பெற்றவர். சுயமரியாதை இயக்கத்துடன் அன்று நெ.து.சு. அவர்கள் தொடங்கிய பயணம், இன்றும் தொடர்கிறது. இடைப்பட்ட காலத்தில், கல்லூரிக் கல்வியை ஒழுங்காக முடித்து, எம்.ஏ.,எல்.டி, பட்டங்களைப் பெற்றார். அரசுப் பணியில் சேர்ந்தார். கலப்புத்