பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

பெரியாரும்‌ சமதர்மமும்‌

அடிபடுவதும், சில பத்திரிகைகள் அடக்கப் படுவதும் மாத்திரமே, போதாது. பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆண்களும், பெண்களுமாக, வீராவேசத்துடன் கிளம்பி, தங்கள் உயிரையும் பலி கொடுத்து, தங்கள் கொள்கையைச் சாதிக்க முன் வர வேண்டும்’ என்றார்.

பல கோடி மக்களிடையே, ஈராயிரம் ஆண்டுகளாக நிலைத்து விட்ட, பயனற்ற, கேடான, சமய நம்பிக்கைகள், அதிலிருந்து வடியும் சீழ் போன்ற, சாதி ஏற்றத் தாழ்வு உணர்ச்சிகள் இவற்றை அப்புறப்படுத்த கடுமையான மருத்துவம் தேவை. அம்மருத்துவத்தைத் தந்தை பெரியார் ஆற்றினார். போதிய அளவில், தமிழ் மக்கள், தங்களைப் பெரியார் மருத்துவத்திற்கு ஆட்படுத்திக் கொள்ளவில்லை. பெரியாரின் இயக்கம், ஆட்சிகளை வேலை வாங்கும் அளவிற்கு வலுப் பெற்ற பிறகு, தியாகஞ் செய்ய வந்தவர்களை விட, ஆதாயம் தேட வந்தவர்கள் அதிகமானவர்கள். எரியும் நெருப்பில், வாழை மட்டைகள் வீழ்ந்தது. எனவே, மதவொழிப்புப் பணியும், சாதியொழிப்புப் பணியும் பழைய சூட்டில் நடக்கவில்லை. இது, பெரியாரின் குறையல்ல; இயக்கத்தின் கோட்பாடுகளின் குறையல்ல. தமிழர் இயல்பில் குறை. தமிழர்களில் பலர், மாக்கல்லுக்கு ஒப்பானவர்கள். கருங்கற்கள் பயன்படுவது போல், மாக்கற்கள் பயன்படுமா?

நாம், வேலை தேடிக் கொள்வதில், சொத்து சேர்த்துக் கொள்வதில், உயர் பதவிகளுக்குச் சதி செய்வதில் காட்டிய ஆர்வத்தை, நம் சமுதாயத்தைத் தலைகீழாக மாற்றுவதில் காட்டவில்லை.

தென்னாட்டில் பெரியார் ஈ. வெ. ராமசாமி, சுயமரியாதை சமதர்மத் திட்டத்தை உருவாக்கி, அதற்கு ஆதரவாக, மாவட்ட மாநாடுகள் கூட்டி, மக்கள் ஒப்புதலைப் பெற்று வரும் கால கட்டத்தில், இந்தியா முழுவதும் செல்வாக்குடைய பெரியவராகக் காந்தியார் விளங்கினார்.

அவர் அரசியல் உரிமைக்கு முன்னுரிமை கொடுத்த அளவு சமுதாய நீதிக்கும், பொருளியல் மாற்றத்திற்கும் கவனம் செலுத்தவில்லை என்பது பலருடைய கருத்து.

தக்ளி நூற்பு, கதராடை நெய்தல் போன்ற சிறு தொழில்களை வளர்க்கும்படி காந்தியார் கட்டளையிட்டார். அத்தகைய