பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிவகங்கையில் சுயமரியாதை மாநாடு

69

சிறு தொழில்களை வளர்ப்பதால், எளியோர் ஓரளவு உணவும், உடையும் பெறுவார்கள் என்பது காந்தியாரின் கணக்கு. செல்வத்தைக் குவித்து வைப்போர், அறங்காவலர்களாக மாறி விட வேண்டுமென்று காந்தியார் இதோபதேசஞ் செய்தார். அப்படி மாறிவிடுவார்களென்றும், கள்ளமறியாத காந்தியார் எதிர் பார்த்தார். எனவே, பொருளியல் தலைகீழ் மாற்றக் கொள்கையைக் காந்தியார் பரப்பவில்லை.

காந்தியாரின் பொருளியல் முறைக்கு மாறான கருத்துடையவர்கள், என்ன நினைத்தார்கள்? அவர்களின் நினைப்பை, திருமதி குஞ்சிதம் தமது சிவகங்கை மாநாட்டுத் தொடக்கவுரையில் எதிரொலித்தார். அது என்ன?

“சுதேச சமஸ்தானத்து ராஜாக்களும், ஜமீன்தார்களும் ரோல்ஸ்ராய் மோட்டாரில்தான் போவார்கள். ஆனால், ஏழையாகிய நீ தக்களி நூற்று சம்பாதிப்பதே சரி என்றும், இதுவே சுயராஜ்ய திட்டங்களில் ஒன்று என்றும் தோழர் காந்தியார் கூறுகிறார். ஆனால், தமிழ்நாட்டு இளைஞர்களோ, அந்த ராஜாக்களும், ஜமீந்தார்களும் கல்லுடைத்துச் சம்பாதிக்கட்டுமே என்று கேட்கப் போகிறார்கள்” என்றார்.

அன்னியன் ஆண்ட அக்காலத்தில், அவ்வளவு வெளிப்படையாகப் பேச உரிமை இருந்தது; கேட்டுப் பின்பற்ற சமுதாயக் கண்ணோட்டமுள்ள மக்கள் இருந்தார்கள். ‘வீணில் உண்டு களித்திருப்போரை, நிந்தனை செய்யும்’ மக்கள் வாழ்ந்தார்கள். அந்தச் சோம்பேறிக் கூட்டத்தில் இடம் பிடித்துக் கொள்ள எதையும் செய்யத் தயங்காதவர்கள், இன்றைக்கிருக்குமளவு பெரிய அளவில் அன்று இல்லை.

சுதேச மன்னர்களும், பெருநிலக் கிழார்களும் கல்லுடைக்கப் போகா விட்டாலும், அரியாசனங்களை இழந்து விட்டார்கள். எஃகு மனிதர் வல்லபாய் படேலின் நடவடிக்கையால், மன்னர் ஆட்சிப் பகுதிகளும், பொதுமக்களுக்குச் சொந்தமான இந்தியாவோடு இணைந்து விட்டன.

தலை விதி, பிறவிப் பயன், ஆகிய உளைச் சேறும் குடிசைத் தொழில்கள் என்னும் மயக்கப் பொருள்களும், பொதுமக்களின் சிந்தனையில் சூடேறாதபடி பார்த்துக் கொள்கின்றன. நிற்க.

மேற்கூறிய சிவகங்கை மாநாட்டின் முதல் முடிவு, இயக்கத்தவர்கள் சிலரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தது.