பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புரட்சி ஏட்டின் தலையங்கம்

75

“இப்படிச் சொல்வது, அவ்வுயர் சாதிக்காரனுக்கு துவேஷமாகவோ அல்லது வேறு எந்த தப்பிதமாகவோ இருக்கின்றது என்று கருதி, நாம் குற்றவாளியாக்கப் படுகிறோமா என்பதை யோசித்துப் பாருங்கள்.

“அது போலவே, ஒரு தனிப்பட்ட மனிதன் எந்தக் காரணத்தினாலோ, ஒரு நாட்டை, இலட்சக்கணக்கான உயிர்களையும், ரூபாய்களையும் பறி கொடுத்து, ஜெயித்து, அரசனாகி, ஏக சக்கராதிபதியாகி. அந்நாட்டின் மீது ஆதிக்கம் பெற்று, வெகு காலமாக ஆட்சி செலுத்தி, பெருமையடைந்து வருவதை இன்று நாம் ஆட்சேபித்து,

‘ஒரு நாட்டை ஆளும் பொறுப்பு, அந்த நாட்டு ஜனங்களாகிய, எங்கள் எல்லோருக்கும் இருக்க வேண்டுமேயொழிய, சண்டையிட்டு ஜெயித்து விட்டதனாலேயே, ஒரு தனிப்பட்ட மனிதன் அந்நாட்டைத் தனக்குச் சொந்தமென்று ஆளுவது, அதிகாரம் செலுத்துவது, எங்களுக்கு இஷ்டமில்லை. ஆதலால், அதை மாற்றக் கிளர்ச்சி செய்வோம்; புரட்சி செய்வோம்; அதற்கேற்ற சட்டங்கள் செய்யவும், முயற்சி செய்வோம். இதை யார் தடுத்தாலும், அத்தடுப்புக்குக் கட்டுப்படமாட்டோம்’ என்று சொல்லுகின்றோம்.

“இப்படிச் சொல்வது இன்று எந்தச் சட்டத்திற்கு உட்பட்டது? அல்லது எந்தச் சட்டப்படி குற்றமாகப் பாவிக்கப் படுகிறது? இதை எந்த அரசாங்கம், துவேஷமாகக் கொள்ளுகிறது? ஏதாவது ஒரு அரசாங்கம் துவேஷமாகக் கொள்ளுகிறது என்றாலும், அதற்காக எல்லோரும் பயந்து, அக்கிளர்ச்சியை விட்டு விடுகிறோமா?” என்று ‘புரட்சி’ கேட்டது.

‘மன்னர் ஆட்சியை ஏற்க மாட்டோம்; மக்கள் ஆட்சியே தேவை’ என்னும் அரசியல் உரிமை உணர்வு எவ்வளவு முறையானதோ,

‘எல்லோரும் சரிநிகர் சமம், என்னும் சமுதாய உணர்வு இயற்கையானதும், முறையானதும் ஆக இருக்கிறதோ, அதே தன்மையானதே, சொத்து சமுதாய உடைமையாக வேண்டுமென்று கோருவதும்” என்று ‘புரட்சி’ வலியுறுத்திற்று. அதையும் காண்போம்.