பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெரியாரும் அவர் தங்கையும் சிறைப்பட்டனர்

79

முழு மனிதர்களாக வளர இயலாது. துய்ப்பதற்கு இல்லாதவர்களும், மனிதத் தன்மையை அடைய முடியாது.

சுக வாழ்வு என்னும் சோம்பேறி வாழ்க்கை, மனித இயலுக்கு மாறானது; மனித வளர்ச்சியைக் கெடுப்பது. அதே போல் வறுமை வாழ்வு—பஞ்ச வாழ்வு—மனிதரைக் குறுக்கி விடும். அவர்கள் கோணலின், கோழைத் தனத்தின், கசப்பின், நம்பிக்கையின்மையின் கலப்பாகி விடுவார்கள்.

எனவே, மனிதன் மனிதனாக மதிக்கப்படுவதற்கு, நடத்தப் படுவதற்கு, வளர்வதற்கு, வாழ்வதற்கு, அரசியல் முறை சமுதாய முறை, பொருளியல் முறை ஆகிய மூன்றுமே சீரமைக்கப்பட வேண்டும். இதை உணர்வதே, முழுமையான காட்சியாகும். இக் காட்சியைப் பெற்றிருந்த பெரியார், 17-12-33 நாளைய ‘புரட்சி’ வார இதழில், மூன்று மாற்றங்களும், ஒரே தன்மையன; ஒரே அடிப்படையைக் கொண்டவை என்று தெளிவாக்கினார்; அத்தகைய மாற்றங்களுக்காகப் பாடுபடுவது குற்றமல்ல என்று சுட்டிக் காட்டினார். அதற்கு மேலும் சென்று, மேற்கூறிய மாற்றங்களால், உடனடியாகப் பாதிக்கப் படுவோர் உயர்நிலையில் இருப்போரே; அவர்கள் மனக்குறை படுவது இயற்கை; அக்குறை நீடிக்காது: அரை தலைமுறைக்குள் அகன்று விடும் என்று எழுதி, நம்பிக்கையை ஊட்டினார். பெரியார் அப்படி நம்பிக்கையூட்ட, அன்று காரணங்கள் இருந்தன.

அப்போது, வங்காளத்தில் நடந்த பரபரப்பான வழக்கு ஒன்றின் தீர்ப்பு, நம்பிக்கையூட்டுவதாக இருந்தது. வழக்கைத் தொடுத்தது, அம்மாநில அரசு. குற்றஞ் சாட்டப்பட்டவர் யார்? அனைத்து இந்தியத் தொழிலாளர் காங்கிரசின் அமைப்புச் செயலரான தோழர் ராஜம்காந்த் முகர்ஜி என்பவர் ஆவார். அவர் ஓர் பேச்சில், எட்டுக் கருத்துக்களை வெளியிட்டாராம். அதில் ஒன்று: ‘நாட்டின் பொருளாதார வாழ்க்கையைத் தொழிலாளரே கட்டுப்படுத்த வேண்டும்’ என்பதாகும். இது அரசிற்கு எரிச்சலையூட்டியது; வழக்குத் தொடுத்து, அடக்க முயன்றது. கல்கத்தா மாஜிஸ்டிரேட் வழக்கை விசாரித்தார். அவர் தமது முடிவில் ‘பேச்சுரிமையானது நாகரீகமும், ஞானமும் வாய்ந்ததெனச் சொல்லிக் கொள்ளும் ராஜாங்கத்தின் எல்லா குடிமக்களுடையவும் பிறப்புரிமையாகும்’ என்று சொல்லி, முகர்ஜியை விடுதலை செய்தார். இதைப் பெரியார் குடியரசில் வெளியிட்டார். இம்முடிவு பேச்சுரிமையைக் காக்கும் என்று நம்பியது ஒரு காரணம் ஆகும்.