பக்கம்:பெரியார்—ஒரு சகாப்தம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

இடைவிடா ஆராய்ச்சி சோதனை மூலம் பல புதிய முடிவுகளை எய்தியதுடன் உயர்வு பெற்றுள்ளனர். நாம் பண்டைய பழம்பெருமையில் அமர்ந்திருப்பதில் திருப்திகொள்கிறோம் நம்மையறியாமல் இவற்றைப்பாதுகாக்கக்கூடியவர்களாக இருந்து வந்துள்ளோம். இந்த வகையில், புரையோடிய சமூகக் கருத்துக்களைச் சாகடிக்கும் வீரர் பெரியாரைக் குறை கூறத்துணிவதில் சிறிதுகூட அறிவுத் தெளிவு இல்லை. பழம் பெருமை பேசிக்கொண்டு, மூடப் பழக்கங்களில் ஆழ்ந்து அடிமைப்பட்டிருக்கும் சமுதாயத்தைச் சீர்திருத்தி, புரையோடிய சமுதாயக் கருத்துக்களை ஒழித்துப் போராடும் வீரரான பெரியாரைக் குறை கூறிப் பயன் என்ன? பகுத்தறிவே எல்லோருடைய உள்ளங்களையும் தங்குதடையின்றி ஆளவேண்டும். சாதி ஒழிந்த சமத்துவ சமுதாயம் அமைக்கும் போர் வீரர்களாக எல்லோரும் முன்வர வேண்டும் நாட்டில் புத்துயிர் ஊட்டிப் பகுத்தறிவாளர்களைப் பெருக்க வேண்டும்.

சாதி முறையை எதிர்த்துப்
போர் தொடுங்கள்

பகுத்தறிவு மூலம் சமுதாயத்தினை சீரமைக்கும் பணியில் ஈடுபடவேண்டும். பல்கலைக்கழகத்தில் தேர்ச்சிபெற்று வெளியேறுவோர் 'இப்பணிக்குத் தூதுவர்களாக விளங்கவேண்டும். சாதிமுறையை எதிர்த்துப் போர் தொடுத்திடுங்கள் என நான் உங்களை அழைக்கிறேன். விஞ்ஞானத்தோடு ஒட்டி வாழமுடியாத மூடப்பழக்கங்களுக்கு எதிராக போர் தொடுக்கும்படியும் உங்களை வேண்டுகிறேன்.

[அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு
விழாவில் 18-11-67 அன்று ஆற்றிய உரையின் ஒரு பகுதி]