பக்கம்:பெரியார்—ஒரு சகாப்தம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

சுயமரியாதைத் திருமணத்தின்
சிறப்புக் காணீர்

".........சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டால், நல்வாழ்வு அமையாது என்று முதலில் சொன்னார்கள். அதன்பின், சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டால் குழந்தை பிறக்குமா? என்று சந்தேகப்பட்டார்கள். குழந்தை மட்டுமல்ல பேரன்-பேத்திகளையும், சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்ட பல்லாயிரக்கணக்கானவர் பெற்று, அவரவர்களுக்கும் சுயமரியாதைத் திருமணமே செய்துவைத்திருக்கிறார்கள்.

தந்தை பெரியார் அவர்களால் தமிழர் சமுதாயத்தில் புரட்சிகரமாகத் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதைத் திருமணங்கள், பெரியார் அவர்கள் தலைமையிலும், மற்ற தோழர்கள் தலைமையிலும் செய்து கொண்ட பல்லாயிரவரில் சிலர் வசதி படைத்தவர்கள்; சிலர் உத்தியோகங்களில் உள்ளவர்கள் என்றாலும் பலர் ஏழைகள்—அன்றாடம் வேலை செய்து சாப்பிடக்கூடியவர்கள்—சமுதாயத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள். அவர்கள் இது சட்டத்திற்கு உட்பட்டதா, உட்படாததா என்பதையெல்லாம் எண்ணிப் பார்க்காமலே இத்திருமணத்தைச் செய்துகொண்டு வந்துள்ளனர்; சட்டத்தைப்பற்றி கவலைப்படவே இல்லை. சட்டம் இல்லையே என்று இது போன்ற திருமணங்கள் நடைபெறாமலுமில்லை. நியாயப்படி இம்முறையானது துவங்கியபோதே சட்டம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஒரு நாட்டில் ஒரு முறையை பெருவாரியான மக்கள் கைக்கொள்வார்களானால், அதனைச் சட்ட சம்மதமாக்க வேண்டியது அரசின் கடமையாகும்.