பக்கம்:பெரியார்—ஒரு சகாப்தம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

வருகிறது. அவருக்குத் திருப்தி ஏற்படுகிற வகையிலே இல்லாமலிருந்தாலும், என்னைப் போன்றவர்கள் இந்த அளவுக்குக்கூட மாறுவார்களா என்று எண்ணிப்பார்க்காத அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

முதியோரின் மூடச்செயல்

ஒருமுறை பெரியாரும் நானும் ஈரோட்டுக்குப் பக்கத்தில் ஈங்கூர் என்னும் கிராமத்தில் சுய மரியாதைப் பிரசாரத்திற்காகச் சென்றோம். அந்த ஊரில் இருந்த பெரிய மனிதர் ஒருவர், நாங்கள் பேசிய இடத்திற்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அந்த ஊரில் உள்ள மற்றவர்களைவிட்டு, நாங்கள் பேசிக்கொண்டிருக்கிற இடத்தில் காற்றடிக்கும் பக்கம் பார்த்துச் சாம்பலைத் தூவிக்கொண்டே யிருக்கச் சொன்னார்; பெரியாரும் பேசிக்கொண்டேயிருந்தார். நான் பேசும்போது குறிப்பிட்டேன், 'சாம்பலைத் தூவிக்கொண்டேயிருக்கிறீர்கள்; அது பெரியாரை என்ன செய்யும்? தாடியிலே படலாம், அது ஏற்கனவே வெள்ளை அதனால் எந்தக் கெடுதலும் வராது' என்று பேசினேன்.

இப்போது பெரியார் பேசும் பேச்சுக்களைக் கேட்டால் ஒருகணம் மயக்கம் வருகிறது. அடுத்து ஒருவரை யொருவர் சந்தித்துப் பேசும்போது நியாயம்தான், தேவைதான் என்ற எண்ணம்தான் வருகிறதே தவிர, அதைக் கேட்ட உடனே பதறிய காலம்; பகைத்து எழுந்த காலம்; 'இவர்களைப் படுகொலை செய்துவிடலாம்' என்று பேசிக்கொண்டிருந்த காலம்; இந்தக்காலங்கள் எல்லாம் அந்தக் காலங்களாகிவிட்டன. இப்போதிருக்கும் காலம் மிகப் பக்குவம் நிறைந்தகாலம். பெரியார் அவர்களின் கருத்துக்களைச் சட்ட மூலம் செயல்படுத்த, இந்த சர்க்காரின் அதிகார எல்லைக்குட்பட்டு என்னென்ன செய்ய முடியுமோ அவைகளைச் செய்ய, எப்போதும் தயாராக இருக்கிறேன்.