பக்கம்:பெரியார்—ஒரு சகாப்தம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

பூகோள ஆசிரியர் சொல்லிக்கொடுக்கிறார். தமிழ் வகுப்பில் சொல்லிக்கொடுக்கும்போது தமிழாசிரியர்கள், 'கங்கை சிவபெருமானின் ஜடாமுடியில் உற்பத்தியாகிறது' என்று சொல்லிக்கொடுக்கின்றனர். பரீட்சையில் மாணவன் தமிழ் வகுப்பில் சொல்லிக் கொடுத்ததைப் பூகோள பரீட்சையிலும், பூகோள வகுப்பில் சொல்லிக் கொடுத்ததைத் தமிழ்ப் பரீட்சையிலும் எழுதினால், அவனுக்கு என்ன கிடைக்கும் ? அவன்மேல் தவறு இல்லை என்றாலும் அவனுக்கு மார்க்குக் கிடைப்பதில்லை. இதுபோன்ற மாறுபாடான கல்வி முறையானது மாற்றியமைக்கப்பட வேண்டும். உண்மையான அறிவை மாணவர்கள் பெற வழி வகுக்கப்படவேண்டும். அத்தகையதான அறிவுப் புரட்சியினைச் செய்ய, நாம் தயாராக இருந்தாலும் மக்கள் அதற்குத் தயாரான நிலையில் இல்லை. அதற்குப் பெரியாரவர்கள் தொண்டும் பிரசாரமும் மிகவும் தேவையாகும்."

[மத்தூர்,'அரசினர் உயர்நிலைப் பள்ளி'
கட்டிடத் திறப்பு விழாவில் 19-12-67
அன்று ஆற்றிய உரையின் ஒரு பகுதி]



சமூக அபிவிருத்திக் கேடு

முஸ்லீமோ, கிறிஸ்துவரோ புராண நாடகங்களைக் கண்டால், அவ்வளவு கேடுஇல்லை. நம்மவர்கள் நிலை அப்படியல்ல; புராணங்களிலே வரும் கடவுள்கள் எல்லாம் தங்கள் கடவுள்கள் என்றல்லவா கருதிக்” கொண்டு, அந்த நாடகங்களைப் பார்க்கின்றனர். இதனால் அவர்கள் மனம்தானே பாழாகிறது. ஆகவேதான், புராண நாடகம் சமூக அபிவிருத்திக்குக் கேடுசெய்கிறது என்று கூறுகிறோம்.