பக்கம்:பெரியார் அறிவுச் சுவடி.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



விண்வெளிமுட்டும் விந்தன் புகழ்!

தமிழ்நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர் மட்டுமல்லாமல், முற்போக்குச் சிந்தனையின் முழு உருவமாய்த் திகழ்ந்தவர் புரட்சி எழுத்தாளர் ‘விந்தன்’ அவர்கள் ஆவார்கள்!

அவரது எழுத்துகள், வெறும் பொழுதுபோக்குக்கானவை அல்ல; பொழுது விடிவதற்கான வித்துகள் ஆகும்! கருத்து முத்துகளாகவும் அவரது சிந்தனைக் கடலிலிருந்து கிடைத்தவைகளாகும்!

‘பெரியார் அறிவுச் சுவடி’ என்று அவர் இறுதிக் காலத்தில் எழுதிய குழந்தைகளைச் சிந்திக்கத் தூண்டும் சீரிய இந்நூல் இளைய தலைமுறைக்கு அவரது அருங்கொடை என்றே கூறவேண்டும்.

விந்தன் கையில் பேனா - வீரன் கையில் வாள்; விற்பன்னர் கையில் வியத்தகு கருவி என்றே நடனமாடி எல்லோரையும் மகிழ்விக்கிறது.

பெரியார் பிஞ்சுகளுக்கு நல்ல ஊட்ட மாத்திரை - பகுத்தறிவாளர் குடும்பத்தில் இருக்கவேண்டிய குடும்ப விளக்கு!

இதனைப் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு அளித்து வெளியிடச் செய்த விந்தன் அறக்கட்டளை அறங்காவலர்கள் அனைவருக்கும் - குறிப்பாக நிருவாக அறங்காவலர் கோ. ஜனார்த்தனன் ஆகியோருக்கும் நமது பாராட்டும், நன்றியும்!

“வாணன் புகழ்க்கெல்லை வாழ்த்துவோர் நாவெல்லை”
என்பது பழம் பாடல்!

“விந்தன் புகழ்க்கெல்லை விண்வெளி முட்டும் எல்லை!”
என்பது புதுப்பாடல்!

வாழ்க பெரியார்!

வளர்க விந்தன் புகழ்!!

வருக விந்தன் விரும்பிய புதுச்சமூகம்!

[கையொப்பம்]
(கி. வீரமணி)


22.06.2004
சென்னை-7.