பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பெரியபுராணம் - ஒர் ஆய்வு புராணக்காலச் சிவனே இங்கு இடம் பெறுகிறான் சங்கப் பாடல்களில் சிவபிரான் பேசப்படும் இடங்கள் பல எடுத்துக் காட்டப்பெற்றனவே. அவற்றுள் எங்காவது வேத வழக்கொடுபட்ட ருத்ரசிவன் காணப்படுகிறானா? இல்லையே ஏன்? புராணங்களில் இடம் பெற்றுவிட்ட திரிபுர தகனம், இடப வாகனம், உமையொரு பாகம் என்பவை ஏன் பரவலாகப் பேசப்படவில்லை? கடவுள் வாழ்த்துப் பாடல்கள், கலித்தொகையின் முதற்பாடல் என்பவை, நீங்கலாக வேறு பாடல்களில் இக் கதைகள் எதுவும் இடம் பெறாமற்போனது ஏன்? வேத பிற்காலத்தில் சிவன் மிகப் பெரியதும் உயர்ந்ததுமான இடத்தைப் பெற்றுவிட்டான் என்பதையும் அது தொல் பழங்கால இந்தியர்களின் ஆதி தெய்வமாகிய சிவன், வேதகால ருத்ரனுடன் இணைந்ததால் தோன்றிய நிலை என்பதையும் 3ஆவது அதிகாரத் தில் குறிப்பிட்டோமல்லவா? மொஹஞ்சதாரோ, ஹாரப்பா போன்ற சிந்துவெளிப் பிரதேசத்தில் கால் கொண்டு வளர்ந்து வேதக்காரர்களின் உள்ளேயும் நுழையும் ஆற்றல் பெற்ற அந்தச் சிவபிரான் யார்? சங்கப் பாடல்களில் பேசப்பெறும் ஆலமர் செல்வன் யார்? இவர்கள் இருவரும் வேறானவர்களா? அவ்வாறு இருக்க முடியாது. சிவன் என்ற பெயர் கூறப்படாவிடினும் மதுரைக் காஞ்சியில் நான்மாடக் கூடலில் விழா நடைபெறுகிறது என்றால் விழா யாருக்கு? சிவபிரானுக்கு என்பது சொல்லாமலே விளங்கும். அப்படி இருக்கச் சிவபிரான் பற்றிய செயல்கள்-திரிபுர தகனம் உள்பட, எதுவும் இப் பாடல்களில் இடம்பெறாமல் போனது ஏன்? மதுரைக் காஞ்சி 'நீரும், நிலனும், தீயும், வளியும், மாக விசும்பொடு ஐந்தும் இயற்றிய மழுவாள் நெடியோன் தலைவனாக (453-455) என்று கூறும்பொழுது ஒரு மாபெருந் தத்துவத்தை மிக எளிதாகக் கூறிச் செல்கிறதே! அப்படி இருக்க அச் சிவபிரான் பற்றிய வேறு எந்தக் குறிப்பும் இடம்பெறாமல் போனது ஏன்? இதே மதுரைக் காஞ்சி திருமாலைக் குறித்துப் பாடும் பொழுது, - 'கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார் மாயோன் மேய ஒன நன்னாள் ' என்று பேசுகிறதே திருமால் அவுனர்களை வென்றான் என்ற கருத்தைக் கூறுகிறதே! -