009 பெரியபுராணத்தின் காப்பிய நாயகர் நம்பியாரூரர் என்றே இதுவரைக் கருதியும், கூறியும் வந்தனர். ஆனால் தொண்டு என்ற பண்பையே காப்பியத் தலைமை பெறுமாறு செய்து புதுவகைக் காப்பியம் புனைந்ததுடன் தமக்கெனத் தனியே காப்பிய இலக்கணமும் வகுத்துக் கொண்டவர் சேக்கிழார் என்பதும் இந் நூலுள் பேசப் பெற்றுள்ளது. இறுதியாகக் காப்பிய நயம், உவமை நயம், புலமைப் பெருக்கம் என்பவையும் பேசப்பெற்றுள்ளன. என் தந்தையார் வழி பெரியபுராணத்தை நீண்ட காலமாகப் பயின்றிருப்பினும் இவ்வாராய்ச்சியில் எழுதப் பெற்றுள்ள கருத்துக்கள் மரபுவழிச் செல்லாமல் முற்றிலும் முரண்பட்டுப் புதியனவாகத் தோன்றியவையே யாகும். இங்குக் கூறப்பெற்றுள்ளவற்றை அனைவரும் ஏற்பர் என்று யான் நினைக்கவும் இல்லை; கூறவும் இல்லை. மரபாகப் பேசப் பெற்றுவரும் அத்துணைக் கருத்துக்களும் மறுக்கப்பெற்றுப் புதிய கருத்துக்கள் பேசப் பெற்றுள்ளன. எனவே இவை ஏற்றுக்கொள்ளப் பெறும் என்று கருதவும் இல்லை. ஆனால் இவற்றைக் கண்டு ஒதுக்கிவிடாமல் பொறுமை யுடன் பார்த்து மேலும் இதுபற்றி ஆயப் பிறர் முன் வந்தால் அதுவே யான் விரும்பும் ஒன்றாகும். இங்குக் கூறப் பெற்றவற்றை ஏற்காவிடினும் இப்படியும் ஆயலாம் என்ற அளவில் ஏற்றுக் கொண்டால் போதுமானது. சமயநூல் என்று பட்டங்கட்டிப் பன்னிரண்டாம் திருமுறை என்று முத்திரை இடப்பட்டு விட்டமையின், பெரியபுராணம் எத்தகைய மாபெரும் பணியைத் தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதற்கும் செய்துள்ளது என்பதை அறிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. சைவனாகப் பிறந்து வளர்ந்து சைவ சமய நூல்களைக் கற்பவனாயினும் இந்தச் சிறிய வட்டத்தைக் கடந்தும் பார்க்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் இவ்வாராய்ச்சியை மேற்கொண்டேன். சமயப் பூசல் என்று வந்துவிட்டால் அரசியல் செல் வாக்குடைய சமயம் பிற சமயங்களைப் பழி வாங்கத் தவறிய தில்லை என்பது உலக சமயங்களின் வரலாறாகும். .
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/11
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை