7. மூவர் காலப் பின்னணி மூவருள் நாவரசர் தோன்றுமுன் தமிழகமும், பல்லவ நாடும் இருந்த நிலை சைவ சமயத்தின் உயிர்நாடியாக விளங்கும் திருமுறைகளில் ஒன்று முதல் ஏழு திரு முறைகளைப் பாடியவர்களை மூவர் முதலிகள் என்று கூறுகிறோம். இவர்களுள் திருஞானசம்பந்தர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் விளங்கியவர் என்பது இன்று அனைவராலும் ஒப்ப முடிந்த ஒன்றாம். மூன்றாவதாக உள்ளவர் நம்பியாரூரராவார். இவர் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இறுதி யில் வாழ்ந்தவர் என ஆய்வாளர் கூறுகின்றனர். திருஞானசம்பந் தருக்கு வயதால் மூத்தவர் திருநாவுக்கரசர். இவர் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இறுதியிலிருந்து ஏழாம் நூற்றாண்டின் பெரும்பகுதி வரை வாழ்ந்தவராவார். இப்பெருமக்கள் தமிழகத்தில் தோன்றுதற்கு முன் இங்கிருந்த அரசியல், சமய நிலைகளைக் காண்டல் தேவையான தாகும். தொண்டை நாடு எனப்படும் பகுதியில் பல்லவனாகிய சிம்ம விஷ்ணு (கி.பி. 575 முதல் 600) ஆண்டு பல்லவராட்சி யைத் தமிழகத்தில் நிலைக்கச் செய்தவனாவான். கி.பி 575 ல் தொடங்கிய இப் பல்லவர் ஆட்சி நாளும் வலுப்பெற்று கி.பி.600 முதல் கி.பி. 710 வரை உச்ச நிலையை அடைந்து, பின்னர் இறங்கத் தொடங்கிற்று. ஏறத்தாழ இதே காலத்தில் அதாவது கி.பி.575 இல் கடுங்கோன் ஆட்சியில் தொடங்கிய பாண்டியர் ஆட்சி வலுப்பெற்று வளர்ந்து கி.பி.640 முதல் 862 வரை உச்ச நிலை அடைந்து, பின்னர் இறங்கத் தொடங்கிற்று. இங்குக் குறிக்கப்பெற்ற மூவருள் திருஞான சம்பந்தர் சோணாட்டிலும் ஏனைய இருவரும் நடு நாட்டிலும் அவதரித் தவராவர். என்றாலும் மூவரும் சிறப்புற்றிருந்த கால எல்லையில் வடக்கே பல்லவர் கை ஓங்கி நின்றது; தெற்கே பாண்டியர் கை ஓங்கி நின்றது. எனவே பல்லவர் காலத்திய சமய நிலை, மொழி நிலை என்பவைபற்றிச் சற்றுக் காண்டல் வேண்டும்.
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/153
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை