பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவர் காலப் பின்னணி 14.5 எங்ங்னம் மீட்கப் பெற்றன என்பது பற்றியும் பின்னர் விரிவாகக் காணலாம். தமிழ் மொழி, நாகரிகம், பண்பாடு என்பவற்றின் கதி இது என்றால் இத்தமிழரின் தொல் பழஞ் சமயமாகிய சிவ வழிபாடும் செம்மையான நிலையில் இருந்திருக்க முடியாது என்பது உறுதி. சோழன், கோச்செங்கணான் களப்பிரர் செல்வாக்குடன் வாழ்ந்த காலத்திலேயே இருந்திருப்பினும் சிவபெருமானுக்கு 70 மர்டக் கோயில் கட்டினான் என்று திரு மங்கை மன்னன் திருநறையூர்ப் பத்தில் கூறுகிறார். திருஞானசம்பந்தரும் அவன் கட்டின என்று கூறப்பெறும் நான்கு கோயில்களிற் சென்று பதிகம் பாடியுள்ளார். என்றாலும் சமணம், பெளத்தம், வைணவம், வைதிக சமயம் என்பவற்றின் இடைப்பட்டுச் சைவ சமயம் நெருக்குண்டு வலி இழந்து காணப் பெறும் நிலை இருந்தது என்பதை ஊகிப்பது எளிதேயாகும். - சமணமும், பெளத்தமும் அனைவரும் அறிந்த எதிரிகளாகும். வைணவம் வைதிகம் இரண்டும் அகச் சமயம் என்ற பெயருள் அடங்குமேனும் அவையும் சைவ சமயத்திற்கு எதிராகவே இருந்தன என்பதை அறிதல் வேண்டும். திருமாலுக்கு, தாம் பரவத்துவம் கூறும் காரணத்தால் சைவத்தை எதிர்த்தனர் வைணவர். வைதிக சமயம் பழைய வேத முறையில் வேள்வி களையே பெரிதெனப் போற்றினமையின் சிவபெருமானுக்கு அங்கும் இடம் இல்லை. சமணராகிய களப்பிரரிடமிருந்து நாடு மீட்கப் பெற்றாலும் பல்லவர் மறுபடியும் வைதிக சமயத்தில் புகுந்தமையின் சைவ சமயம் வலியிழந்தே நின்றது. திருஞானசம்பந்தர் தோன்றிய கால கட்டத்தில் தமிழகத்தின் சமய நிலை இதுவேயாகும். இந்தச் சூழ்நிலையில் புரட்சி ஒன்றைத் தொடங்கிச் சைவத்தின் பழம் பெருமையை நாட்ட விரும்புகிறார் பிள்ளையார். புறப் பகைகளாகிய சமணம், பெளத்தம் என்பவற்றை நேரிடைத் தாக்குதல் மூலம் சாடத் தொடங்குகிறார். வைணவத்தைப் பொறுத்த மட்டிலும் வேறு வழி காணாமையின் நேரிடைத் தாக்குதலுக்கு உட்படுத்து கிறார். புராண இதிகாசக் கதைகளைத் தாராளமாக எடுத்துப் பயன்படுத்தும் பிள்ளையாருக்கு அடி முடி தேடிய கதை, சக்கரம் மாலுக்கு ஈந்த கதை, திரிபுரம் எரித்த கதை, பிரமனின் தலையைக் கிள்ளிய கதை என்பவை பெரிதும் உதவலாயின. இம் மூன்று சமயங்களையும் தாக்குவதை ஒரு பணியாகக் கொண்ட அந்தப் புரட்சி வீரர் ஒவ்வொரு பதிகத்திலும் இத் தாக்குதலை விடாது தொடர்கிறார்.