I 46 பெரியபுராணம் - ஒர் ஆய்வு ஒவ்வொரு பதிகத்திலும் எட்டாவது பாடலில் இராவணன் சிவபக்தன் என்பதையும், ஒன்பதாம் பாடலில் நாரணன், நான் முகன் காணாதவன் சிவபெருமான் என்பதனையும், பத்தாம் பாடலில், புத்தர் சமணர் என்ற சமயவாதிகளைத் தாக்குவது என்பதனையும், கொள்கையாகக் கொண்டு பதினொன்றாம் பாடலில் முற்சொன்ன பத்துப் பாடலகளையும் அன்புடன் பாடுபவர் பெறும் பயனைக் கூறுவதையும் வரன்முறையாகக் கொண்டார் பிள்ளையார். இவ்வாறு பதிகத்தை அவர் ஏன் அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வினாவிற்கு யாரும் விடை கூற இயலாது. அவரையும் அறியாமல் இறையருள் உள் நின்று செலுத்தப்படத் தொடங்கிய முதல் பதிகமே இவ்வாறு அமைந் தமையின் இம்முறையே பின்னரும் வழியாகக் கொண்டார் இப்பெரியார் என்று கருதுவதில் தவறு இல்லை. நாயன்மார்களுள் மூத்தவர் திருநாவுக்கரசர் எனினும் திருக்கடைக்காப்பு என்று பதினொன்றாவது பாடல் பாடுகின்ற மரபு அவரிடம் அதிகம் இல்லை. தாம் பாடிய பாடல்களைப் பாடுபவர் அடையும் பயன் இது என்று கூறும் மரபும் இல்லை. நமச்சிவாய மந்திரத்தின் பெருமை பேசும் பெரியார் 10ஆவது பாடலில் 'நாப்பிணை தழுவிய நமச்சிவாயப் பத்தும் ஏத்தவல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே' என்று தான் பாடுகிறார். எனவே திருக்கடைக்காப்பு என்ற பெயரில், பாடற் பயன் கூறும் முதல் தலைவர், தலைமகனாகி நின்ற தமிழ் ஞானசம்பந்தரே ஆவார் என்று தெரிகிறது. நாவரசர் பெருமான் ஒரோ வழி 11 பாடல்கள் பாடினும் ஒரோ வழி அப்பாடல்களில் வினையகலும், நலம் மல்கும் என்று பாடினும் அப்பயன்கள் முன்னர் உள்ள அவர் பாடிய பாடல்கள் பற்றிக் கூறியன அல்ல என்பதையும் அறிய லாம். - இதன் எதிராக இவர்கள் இருவர்க்கும் இரு நூற்றாண்டுகள் பின்னர் வந்த நம்பியாரூரர் தவறாமல் 10ஆவது பாடலிலேயே பாடற் பயன் கூறும் பழக்கத்தை மேற்கொண்டிருந்தார் என்பதை யும் காண முடிகிறது. இப்பெருமகனார் இவ்வழியை மேற் கொண்டது திருஞானசம்பந்தர் வரலாற்றையும் அவருடைய மூன்று திருமுறைகளையும் ஊன்றிக் கற்றதன் பயனாகலாம் என்று ஊகிப்பது நேரிதாகும். திருக்கடைக்காப்பு எனப்படும் பதினொன்றாம் பாடலைத் திருஞானசம்பந்தர் பாடக் காரணம் யாது? அன்றையச் சூழ்நிலை யில் மக்கள் படும் அவதியைப் போக்க வேண்டுமானால் அவர்கள் மனத்தில் ஓர் உறுதியான நம்பிக்கை துளிர் விடவேண்டும்.
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/174
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை