பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார்கள் யார்? 25.3 கொள்கைகளால் மட்டும் மக்களிடையே பரவினால் அப்பொழுது அது தூய்மை உடையதாய், கொள்கைக்காக ஏற்றுக்கொள்ள்ப் பெறுவதாய் இருக்கும். ஆனால் அதே சமயம் அரசியல் செல்வாக்குப் பெற்றவுடன் அது நடந்துகொள்ளும் முறையே வேறாக இருக்கும் பல்லவ, பாண்டிய ஆதிக்கத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த சமணம் திருநாவுக்கரசருக்கும், திருஞான சம்பந்தரின் தொண்டர்கட்கும் தீங்கு விளைவிக்க அஞ்சவில்லை. சங்ககாலம் முதலே இங்கு வாழ்ந்த சமணர்கள் இங்குள்ள சைவ, வைணவருடன் எவ்வித மாறுபாடும் இல்லாமல் வாழ்ந்தார்கள். எனவே 7 ஆம் நூற்றாண்டின் சமயப்போராட்டம், களப்பிரரில் இவண் தங்கியவர்கள் அரசியல் செல்வாக்கில் வளர்ந்தபொழுது நடைபெற்றதாகும். இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் களப்பிரர் காலத்தில் இங்குக் குடியேறின வேற்று நாட்டுச் சமணராக இருந்திருக்கவேண்டும். அதேபோல பாண்டியன், நெடுமாறன் சைவனாக மாறினவுடன் சமணர்கட்குத் தீங்கு விளைவிக்கச் சைவர்கள் அஞ்சவில்லை. ஏழாம் நூற்றாண்டில் நடைபெற்ற இச் சமயப் போராட்டம் சைவம் சமணம் என்பவற்றிடையேதான் நடைபெற்றது. அரசியல் செல்வாக்கு யாரிடம் இருந்ததோ அவர்கள் மற்றவர்கட்குத் தீங்கு விளைத் தனர். எனவே உலக வரலாறு முழுவதிலும் காணப்படும் இச் சமயப் போராட்டமும் ஒருவருக்கொருவர் சமயத்தின்பேரால் கொடுமை செய்துகொள்வதும் வரலாறு கண்ட மறுக்கமுடியாத உண்மை. இதில் யாரையும் குறைகூறிப் பயன் இல்லை. திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும், சேக்கிழாரும் சமணம் பெளத்தம் என்ற இரு சமய உண்மைகளையும் நன்கு கற்றிருந்தனர். ஆனால் இந்த இரு சமயங்களும் இத்தமிழ் நாட்டில் தோன்றியவை அல்ல. இத் தமிழரின் அடிப்படையான கொள்கைகள் தத்துவங்கள் என்பவற்றை முழுவதுமாக மாற்ற முற்பட்டன. எனவேதான் சம்பந்தரும், அப்பரும் இச் சமணர்களை மிகுதியும் கண்டிக்கத் தொடங்கினர். இவர்கள் கண்டித்துப் பாடிய காலத்தில் (இவர்களின் வாழ்கையின் முற்பகுதியில்) சமணர் அரசியல் செல்வாக்கில் இருந்து இவர்கட்குத் துன்பம் விளைத்தனர். இறுதியில் பல்லவன் சமயம் மாறிச் சமணர் கோவில்களை இடித்தான்; சமணர்க்கும் தொல்லை கொடுத் திருக்கவேண்டும். திருஞானசம்பந்தர் நெடுமாறனை மாற்றிய பின் சமணர்க்குத் தீங்கு செய்ய முற்பட்டான் பாண்டியன். அரசியல் அடிப்படையில் இக் கொடுமைகள் நிகழ்ந்தன என்றால் இதில் ஈடுபட்டவர் ஒரு சிலராகத்தான் இருத்தல் கூடும்.