12. தொண்டு நெறியே சைவ நெறி அன்பு தொண்டு என்பவற்றிற்குச் சேக்கிழார் கண்ட பொருள் சேக்கிழார் பெரிய புராணத்தைப் புதிய முறையில் அமைத்ததுபற்றி 10ஆம் அதிகாரத்தில் பேசப்பெற்றது. பல்வேறு வாழ்க்கை முறைகளை மேற்கொண்டு வாழ்ந்த பல நாயன்மார் கள் வரலாற்றைக் கூறவேண்டிய கடப்பாடுடையவர் என்றாலும் அடியார்களின் வாழ்க்கையின் அடித்தளத்தில் நிற்பது இத் தொண்டுள்ளமே என்பதனைச் சேக்கிழார் காண்கிறார். தொண்டு என்ற சொல்லை மிகவும் விரிந்த பொருளிலேயே இப் பெரியார் பயன்படுத்துகிறார். எனவே தொண்டு செய்வதற்குத் தேவையான அன்பும் இதில் அடங்கிவிடுகிறது. அன்பு என்று கூறியனவுடன் இறைவன் மாட்டு அன்பு, உயிர்கள் மாட்டு அன்பு என்று பிரித்தறியவேண்டிய தேவை இல்லை. எல்லா உயிர்களும் இறைவன் உறைகின்ற கோயில் என்பது இத் தமிழர் மிகப் பழங்காலத்திலேயே அறிந்த ஒன்றாகும். பரிபாடல் என்ற சங்கப் பாடல், இறைவனிடம் ஒர் அன்பர் வேண்டிக்கொள்வதை அழகாக எடுத்துப் பேசுகிறது. 'கேவலமான உலகப் பொருள்களை நான் வேண்டவில்லை; நான்நின்னிடம் வேண்டுவது அன்பு, அறன். அருள் என்று மூன்றுமேயாம்' என்ற கருத்தில்
- * * * * * * * * * * * யா அம் இரப்பவை பொருளும், பொன்னும், போகமுமல்ல; நின்பால் அருளும், அன்பும் ஆறனும், மூன்றும், உருளினர்க் கடம்பின் ஒலிதா ரோயே
என்று கூறுவதை எதிரொலிப்பது போல் தேவாரங்கள் பலவற்றிலும் தொண்டர் தம் அன்பை எடுத்துக் கூறியுள்ளதை முன்னரே கண்டோம்.