பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்சியின் இரண்டாவது வழி 3 2 9 போதாதா என்று நினைத்து இப் பெரியார் வாளா இருந்திருக்க லாம். சந்தனக் கட்டை கிடைக்கவில்லை என்பது அவருடைய குறையன்று. கிடைத்தால்தானே அவர் அரைத்துச் சாத்த முடியும்? இவ்வாறு சாதாரண மனிதர்கள் நினைப்பது இயற்கை தான். ஆனால் அடியார்கள், தொண்டர்கள் என்பவர்கள் இவ்வாறு சமாதானம்_செய்து கொள்ள மாட்டார்கள். பிரளயமே வந்தாலும் தங்கள் தொண்டு நடந்தே தீர வேண்டும் என்று கருதுபவர்கள். மூர்த்தியாருக்குச் சந்தனக் கட்டை கிடைக்க வில்லை. அதற்காக இப்பெரியார் மன்னனிடமோ ஏனையோ ரிடமோ சென்று போரிடவோ, வார்த்தையாடவோ இல்லை. அமைதியாக ஒரு துணிவான செயலைத் தொடங்கினார் தொண்டர். 'நட்டம் புரிபவர் அணிநற்றிரு மெய்ப்பூச் சின்று முட்டும் பரிசாயினும் தேய்க்குங் கைமுட்டா தென்று வட்டந்திகழ் பாறையின் வைத்து முழங்கை தேய்த்தார் கட்டும்புறத் தோல் நரம் பென்பு கரைந்து தேய ’’ சந்தனக் கட்டை கிடைக்க வில்லை என்றால் அதற்காக ஏன் கையைத் தேய்க்க வேண்டும்? இந்த வினாவுக்கு நம் போன் றோர் விடை கூற முடியாது. கட்டை கிடைப்பதும் கிடைக் காததும் இறைவன் செயல். ஆனால் தேய்க்கும் பணிதானே இவருடையது! எனவே தம் பணி நிற்கக் கூடாதென்று கருது கிறார் பெரியார். இவ்வாறு செய்வது நியாயமா? முறையா? பகுத்தறிவுக்கு ஒத்த செயலா? என்ற வினாக்கள் இவர்களைப் பொறுத்த மட்டில் பயனற்றவை. உலகம் புரண்டாலும் தம் தொண்டு நிற்கக் கூடாது; தம் உடம்பில் உயிர் இருக்கும்வரைத் தம் பணி தொடர வேண்டும். அதுவே இத் தொண்டர்களுடைய குறிக்கோளாகும். முழங்கையில் தோல், நரம்பு, எலும்பும் தேய இவர் அரைக்கின்றார். அரைப்பது இவர் பணி, அது நடை பெறுகையில் சந்தனக் கட்டை கிடைப்பது, கிடைக்காமல் போவது, முழங்கை தேய்ந்து உதிரம் பெருகுவது முதலியன இடைப்பிறவரல்களாம். இந்த இடைப்பிறவரல் நிகழ்ச்சிகள் பற்றி இத்தொண்டர்கள் கவலைப்படுவதே இல்லை. அதனா லேயே இவர்கள் தொண்டர்கள் எனப்பட்டனர். காரைக்கால் அம்மையாரின் கணவன் அவரைத் தெய்வ மென்று கருதி, விட்டுநீங்கி, வேறு திருமணஞ் செய்து அவளுடன் வாழத் தொடங்கி விட்டான். உடனே அது பற்றிக் கவலைப் படாத அம்மையார் இறைவனிடம் இதோ வேண்டுகிறார்.