பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராண மூலங்கள் 4 4.5 வாயுபுராணம் போன்ற வடமொழி நூல்களில் தொடங்கிக் கூடவே கலித்தொகை, மூத்த திருப்பதிகம் முதல் தேவாரம் வரை எடுத்துக் காட்டுகிறார். ஆனால் தேவாரம் தவிர, பிற்காலத் தெழுந்த வடமொழி நூல்கள் தவிரப் பிறவெல்லாம் இறைவனுடைய தாண்டவம்பற்றிப் பொதுவாகவே குறிப்பிடு கின்றன. இதில் அவன் தாண்டவம் புரிவது எந்த இடத்தில் என்பன போன்ற குறிப்புக்கள் இல்லை. அம்மையார் பாடல்களில் தில்லையோ, ஆனந்தத் தாண்டவமோ குறிக்கப்படவில்லை நாயன்மார்களுள் காலத்தினால் மிகவும் முற்பட்டவராகிய காரைக்கால் அம்மை இறைவன் திருநடனத்தை மூத்த திருப்பதிகம், இரட்டைமணிமாலை என்ற பதிகங்களில் விரிவாகப் பாடினாலும், மூத்த திருப்பதிகத்தின் முதல் 11 பாடல்களிலும் திருவாலங்காட்டை மட்டுமே குறித்துச் செல்கிறார். இறைவன் ஆடும் இடங்கள் எனப் பிற்காலத்தில் குறிக்கப்பெறும் தில்லை, திருவெண்காடு, மதுரை, குற்றாலம் முதலிய இடங்கள் அம்மை யாரால் குறிக்கப்படவில்லை. எனவே அம்மையார் வாழ்ந்த ஐந்தாம் நூற்றாண்டு வாக்கில் அதிகம் சிறப்புப் பெறாத தில்லை, ஏழாம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் காலத்தில் சிறப்பெய்திவிட்டதை அறிய முடிகிறது. ஒருவேளை களப்பிரர் ஆட்சிக்குட்பட்டிருந்த தில்லை பிறருடைய கவனத்தைக் கவரவில்லையோ என்று கருதுவதிலும் பொருளுண்டு. அம்மையார் சோணாட்டில் பிறந்தவர். அந்தச் சோணாட்டின் முடிமணியாக விளங்கிய சிதம்பரம் அவருடைய கவனத்தை ஈர்க்கவில்லை என்பதுடன் மற்றொன்றையும் கவனித்தல் வேண்டும். இறைவன் ஆடிய பல்வேறு நடனங்களுள் தில்லையில் ஆடப் பெறுவது ஆனந்த நடனம் எனப்பெறும். ஆனால் திருவாலங்காட்டில் இறைவன் ஆடும் தாண்டவம் சண்ட தாண்டவம் அல்லது ஊர்த்துவத் தாண்டவம் எனப் பெயர் பெறும். இத் தாண்டவம் கடுமையும் வேகமும் நிறைந்தது. இதனையே காரைக்காலம்மை தம் பதிகங்களிலும், அற்புதத் திருவந்தாதியிலும் மிக விரிவாகப் பாடுகிறார். தங்கி அலறி உலறு காட்டில் தாழ்சடை எட்டுத் திசையும் வீசி அங்கம் குளிர்ந்தனல் ஆடும் எங்கள் அப்பன் இடம்திரு வாலங்காடே"