பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 பெரியபுராணம்- ஓர் ஆய்வு 'முந்தி அமரர் முழவின் ஓசை முறைமை வழுவாமே அந்தி திருத்தம் அனல்கை ஏந்தி அழகன் ஆடும்மே ' "அடிபேரில் பாதாளம் பேரும் அடிகள் முடிபேரில் மாமுகடு பேரும்-கடகம் மறிந்தாடு கைபேரில் வான் திசைகள் பேரும் அறிந்தாடும் ஆற்றாது அரங்கு ' என்ற இப்பாடல்களில் வரும் வருணனைகள் அனைத்தும் சண்ட தாண்டவம் பற்றியவே தவிர ஆனந்தத் தாண்டவம் பற்றியவை அல்ல என்று கூறத் தேவை இல்லை. அப்படியானால் அம்மை யார் காலத்தில் சிறப்புப் பெறாத தில்லை, நாயன்மார்கள் காலத்தில் எவ்வாறு புகழ் பெற்றது? தில்லை மரங்கள் நிறைந் திருந்தமையின் தில்லைவனம் என்ற பெயர் தமிழ் மரபை ஒட்டி ஏற்பட்ட பெயராகும். கடம்பவனம், வெண்காடு, ஆலங்காடு, ஆர்க்காடு என்பவை அங்கு நிறைந்துள்ள மரங்களால் பெற்ற பெயர்கள். அதுபோலவே தில்லைவனம் என்ற பெயரும் ஏற்பட்டிருத்தல் வேண்டும். அடுத்துப் புராணக் கதைகளின் செல்வாக்கால் புலியூர் என்ற பெயர் வந்திருத்தல் வேண்டும். வியாக்கிரபாதர் என்ற முனிவரால் பெற்ற பெயராகும் இது. சிதம்பரம் என்ற பெயர் தேவார காலத்தில் வழக்கில் இல்லை போலும்! இந்த வளர்ச்சி முறை பக்தி இயக்கக் காலத்தில் தோன்றிய ஒன்றாகும். அதற்கு முன்னர்ச் சிறப்புற்றிருந்த ஆலங்காடு போன்ற ஊர்களின் சிறப்பு மெல்ல மறையவும் புதிய ஊர்கள் சிறப்புப் பெறலாயின. இவற்றையெல்லாம் மனத்துட் கொண்ட சேக்கிழார் அன்றைய மரபு, வளர்ச்சி என்பவற்றை ஒட்டியே தம் காப்பியத்தை அமைக்கின்றார். இறைவனாலேயே 'அம்மே” என்று அழைக்கப் பெற்றவரும். இறைவனாலேயே 'ஆலங்காட்டில் நம் அடியின் கீழ் இருப்பாயாக' என்று ஆணையிடப்பட்டவரும் ஆகிய காரைக்காலம்மை தங்கி யுள்ள திருவாலங்காடே பழமையான புகழ் பெற்றிருக்கவும் சேக்கிழார் தில்லைக்குத் தந்த சிறப்பை ஆலங்காட்டுக்குத் தர வில்லை என்று காணும்பொழுது இதற்கு ஏதாவது காரணம் இருந்திருக்குமோ எனத் தோன்றுகிறது. முதலாவது தில்லை நடனம் அமைதியைத் தருவது. ஆலங்காட்டு நடனம் கொடுமை யான தாண்டவமாகும். ஓயாத ஒழியாத போர்களில் ஈடுபட்டு அமைதியை இழந்து தவிக்கும் சோழர்கட்கும், தமிழ் மக்கட்கும் வேண்டப்படுவது அமைதியேயாகலின் ஆலங்காட்டைப் பெரிது படுத்தாமல் சேக்கிழார் தில்லையைப் பெரிதுபடுத்திப் பாடி யிருத்தல் வேண்டும். அடுத்து நாயன்மார்கள் மூவரும், பின்னர்த்