பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் கண்ட இறையன்பு (பக்தி) 4 67 பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே ' என்பதை இந்தப் பக்தர்கள் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டினர். அவர்களைப் பொறுத்தவரை எவ்வளவு சாதாரண மனிதனுங்கூட இறைவன் உறையுங் கோயிலாகலின், அவர்கள் உதவிக்கு உகந்தவனாகிறான். எவ்வளவு மாபெருங் குற்றம் இழைத்த வனும் இவர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறான். அவன் குற்றஞ் செய்தானா இல்லையா என்பதைக் காணவேண்டிய பொறுப்பு இறைவனுடையது. எனவே இவர்கள் அதுபற்றிக் கவலைப்படுவ தில்லை. கீதை கூறும் சமதிருஷ்டி என்பது இவர்கட்கு முக்கிய மான பண்பாக அமைந்துவிட்டது. மெய்ப்பொருள் நாயனார் முத்தநாதனுக்கு இடையூறு ஒன்றும் வராமல் துணையுடன் அனுப்பி வைத்தது இத்தகைய மனநிலையில்தான் என்பதை அறிந்து கொள்ளவேண்டும். பக்தர், சடங்குகட்கு அதிக மதிப்புத் தருவதில்லை பக்தர்களாக இருப்பவர்கள் சடங்குகட்கு அதிக மதிப்புத் தருவதில்லை. அவ்வாறு கூறுவதால் இவர்கள் சடங்குகளைச் செய்யவே இல்லை என்பது பொருளன்று. ஒரு சிலர் இதனை மேற்கொண்டும் இருந்தனர்; பலர் இவற்றை ஒதுக்கியும் விட்டனர். சடங்குகளைச் செய்தே ஆகவேண்டும் என்று இவர்கள் கருதினதாகத் தெரியவில்லை. இந்தப் பக்தர்களில் பலர் சடங்கு களை ஒரேயடியாகச் சாடினதும் உண்டு. இவ்வாறு சாடியவர் களைச் சித்தர்கள் என்று கூறுவர். இந்தச் சித்தர் கூட்டத்திலும் பலவகையினர் இருந்திருக்கின்றனர். திருமூலர் போன்றவர்கள் யோகம், பிராணாயாமம், சக்கரங்கள் வைத்து வழிபடுதல் என்பவற்றை ஏற்றுக் கொண்டிருந்ததாக அறிகிறோம்.ஆனால் இவை அனைத்தையும் எதிர்த்துச் சாடின சித்தர்களும் உண்டு. எனவே இவை முக்கியமானவை அல்ல. இவர்கள் அனைவரும் பக்தர்கள், தொண்டர்கள் என்பதே முக்கியமானதாகும். மாபெரும் பக்தராகிய திருநாவுக்கரசர் புண்ணிய நீராடலையும், வேள்விகள் செய்தலையும், ஏன் உள்ளன்பில்லாமல் பூசை செய்தலையுமே எள்ளி நகையாடுகிறார். இவருடன் பழகிய திருநீலநக்கர் போன்றவர்கள் முத்தீ வளர்த்து வேள்விகள் செய்த தாக அறிகிறோம். இந்தப் புற வேறுபாடுகளை விட்டுவிட்டுப் பார்த்தால் இந்தப் பக்தர்களிடையே உள்ள ஒருமைப்பாடு நன்கு விளங்கும்.