பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராண அமைப்பு 49.3 வெறும் உடல் வீரத்துடன் நின்றுவிடாமல் பக்தியையும் சேர்த்துக் காப்பிய நாயகனின் பண்புகளாகப் படைக்கும் முயற்சி யில் மேனாட்டு இலக்கியங்களில் மில்டனுக்கு முன்னோடியாக இருந்தவர் வர்ஜில் (Virgil) ஆவார். அவருடைய காப்பிய நாயக னான ஏனியஸ் (Aeneas) பக்தியுடையவன் (pietas), நாடு, மனைவி, மக்கள், உடன் உறைவோர் என்பவர்கட்கு ஆற்ற வேண்டிய கடமைகளுடன் தெய்வங்களிடமும் பேரன்பு கொண்டு அவர்களிடும் கட்டளைகள் அனைத்தையும் நிறைவேற்றினான். ஏனியஸின் பண்புகளில் ஆன்மீகப் பண்பு மிக்கிருந்ததாக வர்ஜில் கூறுகிறார். இப் பண்பு, போர் முதலியவற்றிற்குப் பயன்படாது எனினும் தெய்வத் தொடர்புக்கு உதவியாக இருந்தது. இவ்வாறு ஆன்மீகப் பண்புகளை ஏற்றித் தம் காப்பியத் தலைவனை வர்ஜில் படைத்தாலும் அப் பண்புகள் முற்றிலும் கைவரப் பெறாமையின் ஏனியஸ் பல தவறுகளைச் செய்ய நேரிடுகிறது. வீர காப்பியத்தின் இலக்கணங்கட்கு மாறுபட்டு, பக்தியையும் காப்பியத் தலைவன் பண்பாக ஏற்றி, முதல் முயற்சியாகக் கையாளுகிறார் வர்ஜில். அப்பாத்திரத்தை முழுவதும் ஆன்மீக உயர்வு பெற்ற பாத்திரமாக ஆக்காமல், ஒரு நல்ல ஆன்மீக உணர்வுள்ள மனிதனாக ஆக்குகிறார். ஆன்மீகத்தின் முதற்படி யில் கால் வைத்தவனாகவே அவனைப் படைக்கின்றார். ஏனியஸின் நடத்தையில் காணப்படும் முரண்பாடுகட்கும் புரிந்து கொள்ள முடியாத நடத்தைக்கும் அவனிடம் இருந்த இன்ப துன்ப நடு நிலைக் கோட்பாடே (stoic) காரணம் எனத் திறனாய் வாளர் கருதுகின்றனர். இதிலும் முழு வளர்ச்சியடையாமல் முதற்படியில் உள்ளவனாகவே அவன் படைக்கப்பட்டுள்ளான். நடுநிலை வகிக்கும் தலைவியை வைத்துக் காப்பியம் புனைந்த இளங்கோவே சேக்கிழார்க்கு வழிகாட்டி வர்ஜிலின் காப்பியம் இன்ப துன்ப நடுநிலைக் கோட்பாட்டை (stoic) மேற்கொண்டுள்ள ஏனியஸைத் தலைவனாகக் கொண்டுள்ளது. இந்தக் கோட்பாடு நல்லதா கெட்டதா என்ற ஆய்வு இங்குத் தேவையில்லை. வெறும் உடல் வீரங்காட்டும் தலைவர்களை வைத்துக் காப்பியந் தோன்றிய மேனாடுகளில் கூட இத்தகைய வளர்ச்சியும் பண்டைக் காலத்திலேயே இருந்தது என்பதை அறிவது தமிழ்க்காப்பிய வளர்ச்சியைப் புரிந்து கொள்ள உதவும். ஏறத்தாழ இந்தக் கோட்பாட்டை உடைய பெண் ஒருத்தியைத் தலைவியாகக் கொண்டு தோன்றியதுதான் சிலப்பதிகாரம். காப்பியம் என்றால் அதில் இருக்கவேண்டும் என்று கருதப்பெற்ற அரசர்கள், போர் முதலிய எதுவும்