பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

546 பெரியபுராணம்- ஓர் ஆய்வு 9 'இளமை மீதூர இன்பத்துறையினில் எளியராகிய " ஒருவர், அழகிய மனைவியை வீட்டிலேயே வைத்துக்கொண்டே மாதரார் தம்மை மனத்தினும் தீண்டாமல் பல்லாண்டுகள் வாழ்ந்த திருநீலகண்டர், புலனடக்கத்தின் எல்லையில் நிற்பதனால் வீரர் என்று போற்றப்படுகின்றார். பல்வேறு வகையான வீரர்கள் வாழ்க்கை முறைக்கு இரண்டொரு எடுத்துக் காட்டுக்கள் காட்டப் பெற்றனவே தவிரப் பெரியபுராணம் முழுவதுமே பெருமிதச் சுவையைக் காட்டி நிற்கும் காப்பியம் என்று கூறினால் அது மிகையாகாது. வெகுளிச் சுவை அடுத்துள்ள சுவை வெகுளி அல்லது 'ரெளத்ரம்' எனப்படும். வெகுளி என்பது சாதாரணமாக நமக்கு வரும் சினம் அல்லது கோபம் என்பதிலும் மாறுபட்டதாகும். மிகச் சாதாரண காரணங்கட்காகத் தோன்றி விரைவில் மறந்துபோவதையே சினம் என்று கூறுகிறோம். ஆனால் வெகுளி என்ற மிக ஆழமான உணர்ச்சி அல்லது மெய்ப்பாடு தோன்றுவதற்குக் காரணம் கூறவந்த தொல்காப்பியனார், 'உறுப்பறை, குடிகோள், அலை, கொலை, என்ற வெறுப்பின் வந்த வெகுளி நான்கே ' என்று கூறுகிறார். உறுப்பறை என்பது கை கால் முதலிய உறுப்புக்களை வாங்குதல்; குடிகோள் என்பது தாரம், சுற்றம் முதலியவற்றிற்குக் கேடு சூழ்தல்; அலை-கோல் கொண்டு பருந்துன்பம் விளைத்தல். கொலை , உடல் கொலை தவிர, ஒருவருடைய அறிவு, புகழ் என்பவற்றைக் கொல்லுதலும் ஆம். வெறுப்பின் வந்த வெகுளி என்ற ஆசிரியர் கூறுவது கூர்ந்து ஆயப்படவேண்டும். இச்சூத்திரத்துக்கு உரை வகுத்த பேராசிரியர் 'வெறுப்பின் என்றதனால் ஊடற்கண் தோன்றும் வெகுளி முதலாயினவுங் கொள்க, ’’ எனக் கூறிப்போனார். பேராசிரியர் இவ்வாறு கூறுவது ஒரு சிறிதும் பொருத்தமாகப் படவில்லை. 'வெறுப்பின்வந்த வெகுளி என்பது சாதாராணச் சினத்துக்கும் வெகுளிக்கும் உள்ள வேறுபாட்டை அறிவுறுத்த வந்ததாகும். ஊடற்கண் வரும் சினத்தில் வெறுப்பு இல்லை. வறுப்பு வந்தால் அது ஊடலாகாது. வெறுப்பின் வந்த வெகுளி-தொடர் விளக்கம் மிகப் பெரியதும் ஆழமானதுமான ஒரு காரணம்பற்றியே வெறுப்புத் தோன்றும். அக்காரணத்தை நீக்க முயன்று, அது முடியாத பொழுதுதான் வெகுளி தோன்றும். இவ்வளவு