பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

570 பெரியபுராணம்- ஓர் ஆய்வு பெரியபுராண ஆராய்ச்சி என்ற நூலில் (பக்.176) குறிப்பிட்டுள் ளார். எனவே அந்நாளையப் பெருமன்னன் ஒருவனுடைய ஆட்சியில் அரச அலுவலர் இருந்த நிலையை அறிய முடிகிறது. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். மகேந்திரன் குணபர ஈச்சரம் கோயிலை எடுத்த செய்தியைச் சேக்கிழாருங் கூறுகிறார். ஆனால் அது அவனுடைய சமயப்பற்றை அறிவிப்பதற்காக மட்டும் பேசப்படவில்லை. நாவரசருடன் தொடர்புடைய செய்தியாகலின் இக்குறிப்பும் பேசப்படுகிறது. தாம் பாடும் காப்பியம் சிவனடியார்களின் சரிதங்களைக் கூறும் நூலாக மட்டும் அமைந்தால் போதும் என்று சேக்கிழார் கருதியிருப்பின் இத்துணைத் தூரம் முயன்று செய்திகளைத் திரட்டியிருக்கத் தேவை இல்லை. ஒவ்வோர் அடியார் பிறந்த ஊருக்கும் சென்று, அங்கு வழங்கும் செவிவழிச் செய்திகளைக் கேட்டு, ஆய்ந்து, அவர்கள் வரலாற்றைப் பாடியுள்ளார். மூவர் முதலிகளின் யாத்திரைபற்றிப் பாடவந்த இப்பெருமகனார் அவர் கள் சென்ற வழியே தாமும் சென்று முதலில் எந்த ஊர்ப்பதிகம் பாடப் பெற்றது என்பதையெல்லாம் தம் கூர்த்த மதியால் கண்டு எழுதினார். ஒரே பெயருடைய பல ஊர்கள் தமிழகத்தில் உள்ளனவாகலின் ஒர் ஊரைக் குறிப்பிடும் பொழுதே இன்ன நாட்டின் இன்ன கூற்றத்தில் உள்ள இன்ன ஊர் என்றெல்லாம் கூறுவது, அவர் வெறும் பக்திப்பாடல் பாடவரவில்லை என்பதை யும், அவர் மிகுதியான புவியியல் அறிவும் (GeographicalSense) வரலாற்றறிவும் பெற்றிருந்ததையும் அறிவுறுத்தும். இவ்வடியார் களின் வரலாறுகள் தமிழகத்தின் சரித்திரத்தையே மாற்றிவிட்டன என்ற காரணத்தால் மெய்ம்மை (Facts) எவ்வளவு தூரம் இடம் பெற வேண்டும் என்பதையும் அறிந்து பாடுகிறார். இத்தகைய முறையில் சரிதம் பாடும் ஆசிரியனுக்குள்ள இடர்ப்பாடுகள் பல. கை நிரம்ப மெய்ம்மைகளையும் தகவல் களையும் வைத்துக் கொண்டால் எவற்றை எடுத்துக் கொள்வது? எவற்றை விடுவது? என்பது பெரிய பிரச்சனையாக இருக்கும். அளவுமீறிய தகவல்களைத் தருவதனால் சுவை மிகுந்த காப்பியத்திற்குப் பதிலாகத் தகவல்கள் நிரம்பிய பஞ்சாங்கமாக முடிந்துவிடும். இன்றேல் மற்றொன்று விரித்தல் என்னும் குற்றம் நிகழ்ந்துவிடும். எனவே தம் கூர்த்த மதியால் எவற்றை எடுப்பது? எவற்றை விடுவது? என்பதைத் தெரிந்து கொண்ட கவிஞர் காப்பியத்துக்குரிய பல்வேறு அழகுகளையும் சேர்த்துக் கொண்டு தம் நூலைப் படைக்கின்றார்.