பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 6 பெரியபுராணம் - ஓர் ஆய்வு போயிற்று. தனி மனிதனுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியைமட்டும் கூறத் தொடங்கிய புறப்பாட்ல் கள் வளர்ச்சி அடைந்து குறிப்பிட்ட மனிதனின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியைமட்டும் பாடாமல், அவன் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளையும் பாட முற்பட்ட நிலையே பத்துப் பாட்டில் காணப்பெறும் பாடல்களின் அடிப்படை. இங்குக் காணப்பெறும் பல்வேறுபட்ட செய்திகளைக் கவிதைகளில் தொகுத்துப்பாடும் இயல்பு முதலியன இப்புலவர்களுடைய வளர்ச்சியைக் காட்டுகின்றன. நாடு முழுவதையும் சுற்றிப் பார்த்து அந்த இயற்கை அழகில் ஈடுபடுகிறான் கவிஞன். ஆனால் மேனாட்டிலக்கியத்தில் முல்லை சார்ந்த நாட்டுப்புற இயற்கையை மட்டும் பாடும் பேஸ்டோரல் (Pastoral Poetry) கவிதை இங்கு வளரவில்லை. எந்த ஒன்றை வருணித்தாலும் அதனை மனித வாழ்க்கையுடன் ஈடுபடுத்திப் பாடும் மரபு சங்கப்பாடல்கட்குரிய தாகும். பத்துப் பாட்டில் உள்ள ஆற்றுப் படையில் வரும் நில வருணனைகள் அங்கு வாழும் மக்கள் வாழ்க்கையுடன் சார்த்தியே பேசப்பெறுதலைக் காண முடியும். நெடுநல்வாடை யின் முதல் 29 அடிகள் மழைக்காலத்தை ஈடிணையற்ற முறை யில் வருணித்தாலும் அந்த வருணனையின் முடிவில் மக்களைச் சேர்த்து விடுவதைக் காணலாம். இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பைத் தமிழர் பல்லாயிரம் ஆண்டுகளின் முன்னரே கண்டிருந்தனர். புல் பூண்டில் தொடங்கி மனிதன் ஈறாக உள்ள உயிர் வருக்கத்தை ஒரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரை ஆறு பிரிவுகளாகப் பிரித்தாலும் இவற்றிடையே உள்ள ஒற்றுமையை இவர்கள் அறிந்திருந்தமை யின் இவர்கள் இலக்கியத்திலும் இக் கருத்து இடம் பெறலாயிற்று. மேலும் எந்த ஒரு பொருளைக் கவிஞன் பார்த்தாலும் அதன் இயல்பு, சுற்றுச் சூழ்நிலை, சூழ்நிலையால் அப்பொருள் அடையும் பாதிப்பு என்பவற்றைக் கூர்ந்து கவனித்தான். அதன்பயனாக அந்தப் பொருளைக் கவிதையில் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டவுடன் வெற்றென அப்பொருளைக் கூறாமல் அதன் இயல்பு, சூழ்நிலை என்பவற்றை உடன் சேர்த்தே பயன்படுத்தி னான். இதனால்தான் சங்கப் பாடல்களில் ஒரடை முதல் பல அடைகள் சேர்த்து ஒரு பொருளைக் குறிப்பிடும் மரபு ஏற்படலா யிற்று. யாரேனும் ஒரு புலவன் சிறந்த அடையுடன் ஒரு பொருளைக்குறித்துவிட்டால் பின்னர் வருபவர்கள் அதனை அப்படியே எடுத்து ஆளும் மரபு இந் நாட்டில் பண்டுதொட்டு உண்டு.